Last Updated : 14 Oct, 2023 06:02 AM

 

Published : 14 Oct 2023 06:02 AM
Last Updated : 14 Oct 2023 06:02 AM

திருவள்ளூர் | சம்பா பருவத்தில் நெற்பயிர் நடவு செய்யும் பணிகள் தீவிரம்: இலக்கைவிட கூடுதலாக 2,500 ஏக்கர் சாகுபடி நடைபெற வாய்ப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பருவத்தில் நெற்பயிர் நடவு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், கடந்த 50 நாட்களில் சுமார் 48,400 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது என, திருவள்ளூர் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சொர்ணவாரி, சம்பா, நவரை ஆகிய நெல் சாகுபடி பருவங்களில் சுமார் 2.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது சொர்ணவாரி பருவத்தில் 62,251 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல் அறுவடை நடந்து வருகிறது. இதில், திருவள்ளூர், பூந்தமல்லி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட வட்டாரங்களில் இதுவரை, 50 சதவீத பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள 50 சதவீத பணிகள், இம்மாத இறுதிக்குள் முடிவுக்கு வர உள்ளன.

இந்நிலையில், மாவட்டத்தில் சம்பா சாகுபடி பருவத்தில் நெற்பயிர் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சுரேஷ் தெரிவித்ததாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பருவத்தில் நெற்பயிர் நடவு செய்யும் பணி கடந்த ஆகஸ்ட் மாதத்தின் 3-வது வாரத்தில் தொடங்கியது. நவம்பர் 15-ம் தேதிவரை இப்பணி நடைபெற உள்ளது. நடப்பு சம்பா பருவத்தில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 265 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடவு இயந்திரங்கள், விவசாயத் தொழிலாளர்கள் போதிய அளவில் இருப்பதால், கடந்த 50 நாட்களில் கடம்பத்தூர், திருவாலங்காடு, திருத்தணி, எல்லாபுரம் உள்ளிட்ட வட்டார பகுதிகளில் சுமார் 48,400 ஏக்கர் பரப்பளவில் டி.கே.எம். 13, கோ ஆர் 51, பி.பி.டி 5204, எம்.டி.வி.1010 உள்ளிட்ட நெற்பயிர் ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் சம்பா பருவத்துக்குத் தேவையான யூரியா, உரம் போன்ற இடு பொருட்கள் போதிய அளவில் வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள், தனியார் உரக்கடைகளில் இருப்பில் உள்ளன.

எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் இலக்கை விடக் கூடுதலாக 2,400 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர் சாகுபடி நடைபெற வாய்ப்புள்ளது. இதனால், டிசம்பரில் தொடங்கி, 2024 பிப்ரவரியில் முடியும் நெல் அறுவடையின்போது, சுமார் 1.80 லட்சம் மெட்ரிக் டன் மகசூல் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x