Last Updated : 13 Oct, 2023 06:34 PM

3  

Published : 13 Oct 2023 06:34 PM
Last Updated : 13 Oct 2023 06:34 PM

‘பழநியில் மண் திருட்டை தடுத்த கிராம நிர்வாக அலுவலர்களை கொல்ல முயற்சி’ - போலீஸில் புகார்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி கிழக்கு ஆயக்குடியில் மண் திருட்டை தடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர் உட்பட 3 பேர் மீது கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழநி அடுத்துள்ள கிழக்கு ஆயக்குடி கிராமம் பொன்னிமலை சித்தர் கோயில் அருகே இன்று (அக்.13) காலை சட்டவிரோதமாக மண் திருட்டு நடப்பதாக புகார் வந்தது. இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) கருப்புசாமி, உதவியாளர் மகுடீஸ்வரன், வருவாய் ஆய்வாளர் இலாகி பானு ஆகியோர் அங்கு சென்றனர். அப்போது, அந்த வழியாக மண் அள்ளி வந்த லாரியை நிறுத்தி ஆய்வு செய்தனர். அதில், தாதநாயக்கன்பட்டி கிராமத்தில் மண் அள்ளுவதற்கான அனுமதிச்சீட்டை பயன்படுத்தி பொன்னிமலை பகுதியில் மண் எடுத்து வந்தது தெரிய வந்தது. சட்ட விரோதமாக மண் அள்ளியதாக லாரியை ஆயக்குடி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, லாரியை பின் தொடர்ந்து சென்ற கிராம உதவியாளர் மீது லாரியின் பின்பக்க கதவை திறந்து மணலை கொட்டி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த முயன்றுள்ளனர். அதனை பார்த்த, பொதுமக்கள் மணலை கொட்ட விடாமல் தடுத்து நிறுத்தினர். அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஓட்டுநர் லாரியை காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லாமல் பழநி - திண்டுக்கல் சாலையில் அதிவேகமாக சென்றுள்ளார். லாரியை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்ற விஏஓ கருப்புசாமி, மேலக்கோட்டை விஏஓ பிரேம்குமார் ஆகியோரை முன்னோக்கி செல்ல விடாமல் லாரியை வைத்து கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, பழநி பைபாஸ் சாலையில் உள்ள இடும்பன் கோயில் அருகே மண்ணை கொட்டி விட்டு லாரியுடன் தப்பிச் சென்றனர். மணல் திருட்டை தடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர்கள் மீது கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பழநியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து வந்த பழநி கோட்டாட்சியர் சரவணன் மண் திருட்டு நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். இது தொடர்பாக, விஏஓ கருப்புசாமி தலைமையில் விஏஓ.,க்கள் ஆயக்குடி போலீஸில் புகார் அளித்தனர்.

அதில் கருப்புசாமி, ‘சட்ட விரோதமாக மண் அள்ளி சென்ற லாரிக்கு பாதுகாப்பாக காரில் வந்த சிலர் அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததற்காகவும், கொலை முயற்சியில் ஈடுபட்ட லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x