Published : 13 Oct 2023 05:09 PM
Last Updated : 13 Oct 2023 05:09 PM

“சாமானிய மக்களை பாதிக்கும் வாகன வரி உயர்வை தமிழக அரசு கைவிட வேண்டும்” - தமாகா

எம்.யுவராஜா | கோப்புப்படம்

சென்னை: "வாடகை வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் வரியை அரசு அதிகரித்திருக்கக் கூடாது. தமிழக அரசின் வாகன வரி உயர்வு சாமானிய மக்களின் சொந்த வாகனம் வாங்கும் கனவை கலைக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, வாகன வரி வியர்வை அரசு கைவிட வேண்டும்" என்று தமிழ் மாநில காங்கிரஸின் இளைஞர் அணித் தலைவர் எம்.யுவராஜா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளும் திறனற்ற திமுக அரசு ஆயிரம் ரூபாயை சில லட்சம் பெண்களுக்கு மட்டும் உதவி தொகையாக வழங்கிவிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்திக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வு, பேருந்துகளில் மறைமுகக் கட்டண உயர்வு என ஏழைகளின் வாழ்வாதாரத்துக்கு உபயோகப்படும் அனைத்து பொருட்களின் விலைகளை உயர்த்தி அவர்களது வேதனையை வேடிக்கை பார்க்கிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது சட்டசபையில் தமிழகத்தில் அனைத்துவிதமான வாகனங்களுக்கும் வாகன வரியை உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

இரண்டு சதவீதம் வாகன வரி உயர்வு என்று மேலோட்டமாக அறிவித்து உள்ளார்கள். உண்மையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இதுகுறித்து விவரம் கேட்டபொழுது இருசக்கர வாகனங்களுக்கு 7,000 முதல் 8,000 ரூபாய் வரையிலும் கார் போன்ற வாகனங்களுக்கு 25,000 ரூபாய் வரையிலும், லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு 50,000 ரூபாய் வரையிலும் வாகன வரி உயர்வு இருக்கும் என்று அறிவித்துள்ளார்கள்.

ஏற்கெனவே டீசல், பெட்ரோல் விலையால் விலைவாசி விண்ணை முட்டி நிற்கிறது. இப்பொழுது திமுக அரசு அறிவித்துள்ள வாகன வரி உயர்வால் ஏழைகளின் அன்றாட வாழ்வாதாரத்துக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களும் பல மடங்கு விலை உயர்ந்து நிற்கும். இதனால் பாதிக்கப்படுவது ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் வறுமை கோட்டுக்கீழ் வாழும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் பெரும் கஷ்டத்தையும் வேதனையையும் ஏற்படுத்தும்.

சாமானிய மக்களின் சொந்த வாகனம் வாங்கும் கனவை கலைக்கும் விதமாக அமையும். இருசக்கர வாகனம் இல்லாதவர்கள் ஆட்டோ மற்றும் சிறிய வகை கார்களை தங்களின் முக்கிய போக்குவரத்து வாகனமாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலில் அவர்களுக்கு வரியை ஏற்றி இருப்பது, அதிக கட்டணம் வசூலிக்க காரணமாகிவிடும்.

வாடகை வாகனங்களுக்கான வரியையும், இருசக்கர வாகனங்களுக்கான வரியையும் அதிகரித்திருக்க கூடாது. எனவே ஆளும் தமிழக திமுக அரசு வேறு வகையில் வருமானத்தை ஈடுகட்ட முயற்சி எடுக்க வேண்டுமே தவிர வாகன வரி வியர்வை கைவிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x