Published : 13 Oct 2023 04:29 PM
Last Updated : 13 Oct 2023 04:29 PM
மதுரை: தன் மீது அவதூறு பரப்பிய சென்னை தொழிலதிபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரை செல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நெல்லை மாவட்டம், பணங்குடியைச் சேர்ந்த நவமணி வேதமாணிக்கம் தற்போது சென்னையில் உள்ளார். இவர், 1997-ல் அமெரிக்காவில் சொந்தமாக மென்பொருள் நிறுவனம் நடத்திய நிலையில், 2007-ல் சென்னைக்கு வந்து சென்னையிலும் மென்பொருள் நிறுவனத்தை நடத்தியதாக கூறப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் பணியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை கணினி மயமாக்கும் டெண்டருக்கு விண்ணப்பித்தபோது, அப்போதைய கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த செல்லூர் கே.ராஜூ கட்சிக்கென நிதி கேட்டு கொடுக்காததால் டெண்டர் கிடைக்காமல் தொழிலில் நஷ்டமடைந்ததாகவும், தற்போது சென்னையில் நவமணி தேவமாணிக்கம் கார் ஓட்டி வருதாகவும் சமீபத்தில் ஓரிரு ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்நிலையில், தன் மீது அவதூறு பரப்பிய நவமணி வேதமாணிக்கம் மற்றும் செய்தி வெளியிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செல்லூர் காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: "தனிப்பட்ட வாழ்க்கைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக என்னை பற்றி ஓரிரு ஊடகம், பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்காவிலுள்ள கோடீஸ்வரர் தெருவுக்கு கொண்டு வந்தது போல் செய்தி வெளியிட்டு, எனது 40 ஆண்டு கால பொது வாழ்க்கைக்கு களங்கம் விளைவிக்கப்பட்டுள்ளது. எனது நேர்மையை கெடுக்கும் வகையில் நான் பணியாற்றிய நிகழ்வை கொச்சைபடுத்தும் நோக்கில் செய்திகள் வந்துள்ளது. இது என்னை பாதித்துள்ளது. என்னுடைய குடும்பத்தினருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
எனது நண்பர்கள், கட்சி தலைவர்கள், எங்களது கட்சியின் பொதுச் செயலாளரே பதிலை கொடுக்க வேண்டும் என சொல்லும் வகையில் செய்தியின் வலிமை இருந்தது. நான் அமைச்சராக இருந்தபோது, கூட்டுறவுத் துறையில் எந்த ஒரு பொருளை கொள்முதல் செய்தாலும், நிபுணர்கள், அதிகாரிகளின் குழு தான் கணினி மூலம் கொள்முதல் செய்ய முடிவெடுப்பர். துறை அமைச்சர்களை கேட்டு செய்ய மாட்டார்கள்.
நான் கணினி நிபுணரும் இல்லை. இது எல்லோருக்கும் தெரியும். சம்பந்தமின்றி என்னை பற்றி குறை சொல்லும் வகையில் பேட்டி (நவமணி) அளிக்கப்பட்டுள்ளது. பணியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கணினி மென்பொருளை வேறொரு நபருக்கு கொடுத்ததாக குற்றம் சொல்கிறார். அது முழுக்க, முழுக்க தவறு. மாநில கூட்டுறவு, மாவட்ட கூட்டுறவு வங்கி என அனைத்திலும் கணினி மயமாக்கப்பட்ட நிலையில் யாரும் குறை சொல்லவில்லை.
தேர்தல் நேரத்தில் இதுபோன்ற செய்தி வருவதால் இதன் பின்புலத்தில் யாரோ இருக்கலாம் என சந்தேகிக்கிறேன். அரசியல் காழ்புணர்ச்சியில் பழி வாங்கும் நோக்கில், அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விசாரணையின் போது, எனது தரப்பு ஆவணங்களை சமர்பிக்கிறேன்" என செல்லூர் கே.ராஜூ கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT