Published : 13 Oct 2023 09:14 AM
Last Updated : 13 Oct 2023 09:14 AM
ஓசூர்: வெடி பொருட்கள் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் ஓசூரில் குடியிருப்பு பகுதியில் வியாபாரிகள் பட்டாசுகளை இருப்பு வைத்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 60-க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் உள்ளன. இதில், தமிழக எல்லை யான ஜுஜுவாடியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் உள்ளன. வரும் தீபாவளி பண்டிகை விற்பனையை மையமாக வைத்து இக்கடைகளுக்கு தற்போது, சிவகாசியிலிருந்து பட்டாசுகள் வாகனங்கள் மூலம் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
ஓசூர் பகுதி பட்டாசுக் கடைகளில் கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதி மக்களும் பட்டாசுகள் வாங்க வருவது வழக்கம். இதனால், இங்குள்ள கடைகளில் அளவுக்கு அதிகமாகவும், பாதுகாப்பு விதிகளுக்கு மாறாகவும் பட்டாசுகளை இருப்பு வைத்து விற்பனை செய்வது தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், அண்மையில் கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் மற்றும் கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி பட்டாசுக் கடையில் நடந்த தீ விபத்தில் பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, வெடி பொருட்கள் பாதுகாப்பு விதிமுறைகளை பட்டாசுக் கடைகள் பின்பற்றுவதைக் கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதனால், உரிமம் பெற்ற பட்டாசுக் கடைக்காரர்கள் கடைகளில் கூடுதலாக பட்டாசுகளை இருப்பு வைக்க முடியாததால், குடியிருப்பு பகுதியில் வீடுகளை வாடகைக்கு எடுத்து மறைமுகமாக இருப்பு வைத்து வருவதாகவும், கரி மருந்துகளைப் பயன்படுத்தி அதிக சப்தம் எழுப்பும் வெடிகளைத் தயாரித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல, பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் பட்டாசுக் கடைகள் அருகே பிளாஸ்டிக் ஷீட் மூலம் தடுப்புகள் அமைத்து கிப்ட் பாக்ஸ் தயாரிக்கும் பணியிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறியதாவது: அதிக வாகனப் போக்குவரத்து உள்ள ஓசூர் பாகலூர் சாலையில் வணிக வளாகம் மற்றும் குடியிருப்பு பகுதியில் 10-க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் உள்ளன. இதனால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இக்கடைகளை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும்.
மேலும், சிலர் மறைமுகமாக குடியிருப்பு பகுதியில் வாடகை வீடுகளில் பட்டாசுகளை இருப்பு வைத்து வருகின்றனர். இதை அதிகாரிகள் கண்காணிப்பதோடு, உரிமம் பெற்ற பட்டாசுக் கடைகளில் வெடி பொருட்கள் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றுவதை ஜுஜுவாடி மற்றும் பாகலூர் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக ஓசூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா கூறும்போது, “ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள பட்டாசுக் கடைகளுக்கு ஏற்கெனவே உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அந்த கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.
ஓசூர் வருவாய் ஆய்வாளர் ரமேஷ் ரெட்டி கூறியதாவது: அத்திப்பள்ளி பட்டாசுக் கடை தீ விபத்துக்குப் பின்னர் வருவாய்த் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறையினர் கூட்டாக பட்டாசுக் கடைகளில் ஆய்வு செய்து வருகிறோம். நேற்று முன்தினம் கூகுள் மீட் மூலம் பட்டாசுக் கடை உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், வெடி பொருட்கள் பாதுகாப்பு விதிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வரும் இரு தினங்களுக்குள் ஓசூர் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்துப் பட்டாசுக் கடைகளிலும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT