Published : 12 Oct 2023 09:35 PM
Last Updated : 12 Oct 2023 09:35 PM

மகப்பேறு மருத்துவர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உறுதி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்

கோப்புபடம்

மதுரை: தலைமைச் செயலகத்தில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

மதுரை மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படும் கர்ப்பணி பெண்கள், அடிக்கடி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பதாக சர்ச்சை எழுந்தது. கடைசியாக மூன்று கர்ப்பணி பெண்கள் உயிரிழந்ததாக நகர்புற ஆரம்ப சுகாதாரநிலையங்களில் பணிபுரிந்த மருத்துவர்கள், மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத்துக்கு புகார் கடிதம் அனுப்பினர்.

அவர்,நேரடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு வார்டில் நுழைந்து விசாரிக்கவே, அதற்கு மருத்துவமனை மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நகர்நல அலுவலர் வினோத், ஆட்சியர் சங்கீதா கவனத்திற்கு கொண்டு சென்றார். அவர் விசாரணை மேற்கொண்டு, நகர்நல அலுவலர் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை என்றும், கர்ப்பிணி பெண்கள் உயிரிழப்பதற்கு காரணமான அரசு ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ‘டீன்’ ரெத்தினவேலுவிடம் வலியுறுத்தியுள்ளார்.

அவர், நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்த ஆட்சியர் சங்கீதா, சுகாதாரத் துறை செயலர் கவனத்துக்கு கொண்டு செல்லவே, சுகாதாரத்துறையை சேர்ந்த மூவர் குழு, நேரடியாக மதுரை வந்து அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்தவர்கள், நகர்புற ஆரம்ப சுகாதாரநிலைய மருத்தவர்களிடம் விசாரித்தனர். அதிருப்தியடைந்த தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டத்தை அறிவித்தது.

கடந்த ஒரு வாரமாக அவசரமில்லாத அறுவை சிகிச்சைகளை நிறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளை முதல் தமிழகம் முழுழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் குடும்ப நல அறுவை சிகிச்சைகளையும் நிறுத்தி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்தது.

அறுவை சிகிச்சை நிறுத்தினால் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டதால் இன்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், சுகாதாரத் துறை செயலர் தலைமையிலான குழுவினர், தலைமை செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தலைவர் செந்தில், அதன் நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் மகப்பேறு மருத்துவர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக உள்பட சில கோரிக்கைளை நிறைவேற்றுவதாக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால், சமுகமாக தீர்வு காணப்பட்டதாக கூறி உடனடியாக இன்று மாலை முதல் தமிழகம் முழுவதும் போராட்டத்தை மருத்துவர்கள் வாபஸ் பெற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x