Published : 12 Oct 2023 09:16 PM
Last Updated : 12 Oct 2023 09:16 PM
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 18,974 கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்யாததாலும், கர்நாடக மாதாந்திர நீர் பங்கீட்டை வழங்காததாலும், அணைக்கு நீர்வரத்து சரிந்து காணப்பட்டது. இதன் காரணமாக, அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது கடந்த 10ம் தேதி முதல் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக 500 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக - கர்நாடக எல்லையில் காவிரியின் துணை நதியான பாலாறு அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தாமரைக்கரை, தட்டக்கரை, பர்கூர், சென்னம்பட்டி வனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், பாலாற்றில் நீ ர்வரத்து அதிகரித்துள்ளது. அதேபோல், தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான சின்னாறு, தொப்பையாறு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், நீர்வரத்து இன்றி வறண்ட காணப்பட்ட பாலாறு, காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு கடந்த 9-ம் தேதி விநாடிக்கு 122 கன அடியாக இருந்த நீர்வரத்து, 10ஆம் தேதி 163 கன அடியாகவும், 11ஆம் தேதி 2,528 கன அடியாக அதிகரித்து காணப்பட்ட நிலையில் இன்று காலை 9,345 அதிகரித்தது. தொடர்ந்து, இன்று மாலை 4 மணிக்கு விநாடிக்கு 18,974 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர்மட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அணையின் நீர்மட்டம் 31.31 அடியில் இருந்து 34.30 அடியாகவும், நீர் இருப்பு 8.05 டிஎம்சியில் இருந்து 9.34 டிஎம்சியாகவும் அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT