Published : 12 Oct 2023 08:33 PM
Last Updated : 12 Oct 2023 08:33 PM
கோவை: கோவையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு சொந்தமான பினாமி நிறுவனத்தின் இடங்களுக்கு அமலாக்கத் துறையினர் இன்று (அக்.12) சீல் வைத்தனர்.
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஆ.ராசா, கடந்த 2004 முதல் 2007-ம் ஆண்டு காலக்கட்டத்தில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு சுற்றுச்சூழலுக்கான அனுமதி வழங்கப்பட்டதில் சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றதாகவும், அதில் ஆ.ராசா எம்.பி ஆதாயமடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக அமலாக்கத் துறையினர் விசாரித்தனர். விசாரணையில், ஆ.ராசா கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு விதிகளை மீறி சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதும் தெரியவந்தது. அதற்கு பிரதிபலனாக கடந்த 2007-ம் ஆண்டு ஆ.ராசாவின் பினாமி நிறுவனத்துக்கு மிகப் பெரிய அளவில் கமிஷன் வந்திருப்பதும், அதன்பின் அந்த பினாமி நிறுவனத்தை தன்னுடைய குடும்பத்தார் பெயரில் ஆ.ராசா இணைத்துக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த கமிஷன் தொகையை வைத்தே பினாமி நிறுவனம் பெயரில் கோவையில் பல கோடி மதிப்பிலான 47 ஏக்கர் நிலத்தை ஆ.ராசா வாங்கி இருந்தது தெரியவந்ததாக அதிகாரிகள் குற்றச்சாட்டினர். இதைத் தொடர்ந்து கோவையில் வாங்கியிருந்த அந்த சொத்துகளை கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமலாக்கத் துறையினர் முடக்கினர்.
இந்நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டம் 2022 விதிகளின்படி, ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகளை அவரது பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் கைப்பற்றி உள்ளோம் என அமலாக்கத் துறையினர் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக இவ்வாறு கண்டறியப்பட்ட 47 ஏக்கர் இடத்துக்கு சீல் வைக்கும் பணியை அமலாக்கத் துறையினர் இன்று (அக்.12) மேற்கொண்டனர். இதற்காக 3 பேர் அடங்கிய அமலாக்கத் துறையினர், நில அளவைத்துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் கோவையில் சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில், திருமலையாம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு வருவாய் கிராமத்துக்கு வந்தனர்.
நில அளவைத்துறை அதிகாரிகள் மூலம் அந்த இடங்கள் முழுவதும் அளவீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆ.ராசாவின் பினாமி நிறுவனத்துக்கு சொந்தமாக அங்கு 15 இடங்களாக இருந்த ரூ.5.85 கோடி மதிப்புள்ள 47 ஏக்கர் இடத்துக்கு சீல் வைக்கப்படுவதாக அறிவித்து, அங்கிருந்த பலகையில் அமலாக்கத் துறையினர் நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT