Published : 12 Oct 2023 08:30 PM
Last Updated : 12 Oct 2023 08:30 PM
மதுரை: கொடைக்கானல் மலையில் கடந்த 2018-ல் கஜா புயலால் சாய்ந்த மரங்களை இத்தனை ஆண்டாக அகற்றாதது ஏன் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு: கொடைக்கானல் வடகவுஞ்சி கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் 1980-ஆம் ஆண்டு முதல் 95 குடும்பங்கள் விவசாயம் செய்கின்றனர். இந்த இடத்திற்கு பட்டா கேட்டு 1989-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். பட்டா வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க மாவட்ட வருவாய் அலுவலருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், இதுவரை பட்டா வழங்கவில்லை. வனப்பகுதியில் இருந்து எங்களை வெளியேற்ற அதிகாரிகள் அடிக்கடி தொந்தரவு செய்கின்றனர்.
எங்களது பட்டா கோரிக்கையை நிராகரித்து திண்டுக்கல் ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்து இடைக்கால உத்தரவு பெற்றோம். தற்போது 95 குடும்பமும் தலா 3 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்கிறோம். ஏராளமான மரங்களை இப்பகுதிகளில் வளர்த்துள்ளோம்.இந்நிலையில் 2018-ம் ஆண்டில் கஜா புயலின்போது, ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்ததோடு, பல வீடுகளும் இடிந்தன. எங்கள் இடங்களில் மட்டும் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன.
இம் மரங்களை வெட்டி லாரிகளில் கொண்டுச் செல்ல விடாமல் அதிகாரிகள் தடுக்கின்றனர். இதன்மூலம் பாதிப்புக்களை சந்திக்கிறோம். எனவே, கஜா புயலால் சாய்ந்த 1500 மரங்களை வெட்டி லாரிகளில் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிடவேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவு: கடந்த 1950-ம் ஆண்டிலேயே வடகவுஞ்சி உள்ளிட்ட பகுதிகள் தமிழக அரசுக்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மனுதாரர் தெரிவிக்கும் 1500 மரங்களும் வனத்துறை சார்பில், நடப்பட்டு பராமரிக்கப்பட்டது என வனத்துறை தெரிவிக்கிறது.
இருந்தாலும், 2018-ம் ஆண்டில் கஜா புயலால் விழுந்த 1500 மரங்களை இத்தனை ஆண்டாக அங்கிருந்து அகற்றாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. மேலும், இவ்விவகாரத்தில் அமைதியை ஏற்படுத்த நீதிமன்றம் விரும்புகிறது. சம்பந்தப்பட்ட இடத்தில் புயலால் விழுந்த மரங்களை வனம், வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அகற்றுவது குறித்து வழக்கில் அனைத்து தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பி மரங்களை அகற்ற 4 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT