Published : 12 Oct 2023 06:16 PM
Last Updated : 12 Oct 2023 06:16 PM
நாமக்கல்: மோட்டார் வாகனங்களுக்கான வரி உயர்வு பக்கத்து மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவு தான் என நாமக்கல்லில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
நாமக்கல்லில் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவங்கர் பங்கேற்றுப் பேசியது: “லாரி உரிமையாளர்கள் தெரிவித்த ஸ்டிக்கர் பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழக்குகள் தொடர்பாக லாரி உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கையின்பேரில் காவல்துறை தலைவரிடம் நடவடிக்கை மேற்கொள்ளும்படி தெரிவித்தேன். அதன்பின் 25 சதவீதம் அப்பிரச்சினை குறைந்துள்ளது. சாலைப் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் இதுகுறித்து காவல் துறை தலைவரிடம் மீண்டும் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
திண்டுக்கல் - அரவக்குறிச்சி சாலையில் திருட்டு, வழிப்பறி நடப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதுதொடர்பாக அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல் லாரி உரிமையாளர்களின் அனைத்து கோரிக்கைகள் தொடர்பாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நம்முடைய பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அளவுக்கு உயர்த்தும் நோக்கில் தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
புதிய தொழிற்சாலைகள் அமையும்போது லாரி தொழில் பெரிய அளவில் விரிவடைய வாய்ப்புள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை வாகன வரி விதிப்பு என்பது 15 முதல் 23 ஆண்டுகள் வரை உயர்த்தப்படாமல் இருந்தது. ஒரு பக்கம் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் விலையை உற்பத்தியாளர்கள் உயர்த்தி வருகின்றனர். மத்திய அரசு டீசல் விலையை உயர்த்திக் கொண்டிருக்கிறது. இப்போது உயர்த்தப்பட்டுள்ள வரி ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தைக் காட்டிலும் குறைவாக உள்ளது. எனினும், கர்நாடகாவில் வாகன வரி குறைவாக உள்ளதாக கூறப்ப்பட்டது. எனவே அதில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் ஓட்டுநர் உரிமம் சான்று, பதிவுச்சான்று, தகுதிச்சான்று பெறுவது தொடர்பான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் மோட்டார் வாகனங்களுக்கான வரி உயர்வு பக்கத்து மாநிலங்களை விட குறைவுதான். 23 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் குறைவாகத்தான் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களின் உதிரி பாகங்கள் விலை உயர்த்தப்படாது.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடர்பாக தமிழக முதல்வர் முடிவு எடுத்து அறிவிப்பார். தீபாவளி போனஸ் கேட்டு போக்குவரத்து தொழிற் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். பேட்டரியில் இயங்கும் பேருந்துக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது” என்றார். இந்த நிகழ்வில், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், எம்எல்ஏக்கள் கு.பொன்னுசாமி, ஈ.ஆர்.ஈஸ்வரன், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் சி.தன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT