Published : 12 Oct 2023 06:13 PM
Last Updated : 12 Oct 2023 06:13 PM
மதுரை: கல்லணை கால்வாய் பிரதான வாய்க்காலில் அசம்பாவித சம்பவம் நடக்காமல் தடுக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகாவை சேர்ந்த தமிழ்நேசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியுள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் கரிகால மன்னால் கட்டப்பட்ட கல்லணை பல்வேறு டெல்டா மாவட்டங்களில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கும் பயன்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, பட்டுக் கோட்டை மற்றும் கறம்பக்குடி கல்லணை கால்வாய் பிரதான வாய்க்காலில் 58 கிலோ மீட்டர் முதல் 92 கிலோ மீட்டர் வரை புனரமைக்கும் பணியை தனியார் ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது. கல்லணை கால்வாய் விரிவாக்கம் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்துதல் பணியை உதவி செயற்பொறியாளர் புஷ்பராணி மேலும் உதவி பொறியாளர் ஆனந்த ராஜ் இருவரும் செயல்படுத்துகின்றனர்.
கல்லணை கால்வாய் ஆற்றுக்கரையோரம் உள்ள ஈச்சங்கோட்டை, பாச்சூர், அய்யம்பட்டி, முதலிப்பட்டி, ஊரணிபுரம், ஆண்டிப்பட்டி, சென்னிய விடுதி மற்றும் ராங்கியன் விடுதி உள்ளிட்ட 17 பகுதிகளில் கரையிலுள்ள தடுப்பு இரும்பு வேலி கம்பிகளை காணவில்லை. கல்லணை கால்வாய் ஆற்று கரையில் பல உயிர்கள் பலியான சம்பவம் நடந்துள்ளது. இனிமேல் நடக்காமல் தடுக்க இரும்பு தடுப்பு வேலி கம்பிகளை உடனே அமைக்க வேண்டும், இரும்பு கம்பி வேலிகளை அமைக்க நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தி இருந்தார்.
இம்மனுவை நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் ஆகியோர் அமர்வு விசாரித்தது. அப்போது, அரசுத் தரப்பில் கல்லணை கால்வாயின் பிரதான வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முடிவடையும். அதற்கு பின்பு இரும்பு தடுப்புகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், அசம்பாவித சம்பவங்கள் நடக்காத வண்ணம் மேற்கொள்ள வேண்டிய பணிகளை விரைவாக செய்து முடிக்க அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT