Published : 12 Oct 2023 03:28 PM
Last Updated : 12 Oct 2023 03:28 PM
புதுச்சேரி: “அமைச்சர் பதவியை சந்திர பிரியங்கா ராஜினாமா செய்ததற்கு, அவர் கூறியுள்ள காரணங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று புதுச்சேரி பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.
'என் மண் என் தேசம்' என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் வட்டாரத்துக்கு உட்பட்ட 39 கிராம பஞ்சாயத்துக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட புனித அரிசி கலசமானது ஊர்வலமாக பாரதியார் பல்கலைக்கூடம் எடுத்து வரப்பட்டது. இதனை நேரு யுவகேந்திரா மூலம் தேசத்துக்கு வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. சட்டப் பேரவைத் தலைவர் செல்வம் கலந்துகொண்டு புனித கலசங்களை வழங்கினார். இதில் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: ''புதுச்சேரியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா ராஜினாமா செய்ததற்கு அவர் கூறியுள்ள காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது. அவரது துறையில் கடந்த 2 ஆண்டுகளில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. புதிய அமைச்சர் நியமனம் இலாகா மாற்றம் குறித்து முதல்வர் ரங்கசாமி முடிவு செய்வார்.
அமைச்சரவையில் யாரை அமைச்சராக நியமிக்க வேண்டும், யாரை நீக்க வேண்டும் என்பது முதல்வரின் தனிப்பட்ட உரிமை. புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. சந்திர பிரியங்கா கூறும் காரணங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. சந்திர பிரியங்காவுக்கான முழு சுதந்திரத்தையும் முதல்வர் வழங்கினார்.
பாலினம் என்ற சொல்லே என்னை பொறுத்தவரையில் தவறானது. மூன்று முறை எம்எல்ஏவாகவும், ஒரு முறை அமைச்சராகவும் இருந்துள்ளார். ஆகவே, பாலின ரீதியில் தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்ந்தேன் என்று அவர் கூறிவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதனை அவராகவே உருவாக்கி இருக்கின்றார். அதுபோன்று அவர் கூறியிருக்கக் கூடாது'' என்று புதுச்சேரி பேரவைத் தலைவர் செல்வம் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT