Published : 12 Oct 2023 04:12 PM
Last Updated : 12 Oct 2023 04:12 PM
புதுச்சேரி: புதுச்சேரி கதிர்காமத்தில் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வராக ரங்கசாமி இருந்த போது, ரூ.850 கோடி மதிப்பீட்டில் இதற்கு அடிக்கல் நாட்டி பணிகள் நடந்தன. அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகள் எழுப்பப்பட்டு, கடந்த 2008-ம் ஆண்டு ரங்கசாமி முதல்வர் பதவியில் இருந்து இறக்கப்பட்டார்.
பின்னர் நிதி நெருக்கடி காரணமாக இந்தமருத்துவக் கல்லூரி கட்டும் பணி கைவிடப்பட்டது. அதன் பின்னர் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த வைத்திலிங்கம், சுகாதாரத்துறை அமைச்சர் வல்சராஜ் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் இதற்கான திட்ட மதிப்பீடு குறைக்கப்பட்டு, இந்த அரசு மருத்துவக்கல்லூரி கட்டி முடிக்கப்பட்டது.
இதற்கிடையே, கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வெற்றி பெற, மீண்டும் முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றார். அதன் பின்னர் அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கியது. இது மருத்துவக் கல்லூரி என்பதால் இங்கு மிகவும் பெரிய மருத்துவமனை ஒன்றும் கட்டப்பட்டது. அதன் பின்னர் புதுவை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. அதிநவீன மருத்துவக் கருவிகள் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. பிரேத பரிசோதனைக் கூடமும் இங்கு கொண்டு செல்லப்பட்டது.
மொத்தம் 40 ஏக்கரில் செயல்படும் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 180 எம்பிபிஎஸ் மருத்துவ மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தற்போது 200 மருத்துவர்கள், 194 செவிலியர்கள், 700 எம்டிஎஸ் ஊழியர்கள் உட்பட 1,500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். அவசர சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு, குழந்தைகள் நலம் உட்பட பல சிகிச்சைப் பிரிவுகள் இங்குள்ள மருத்துவமனையில் உள்ளன.
இங்கு நாள்தோறும் தமிழகம், புதுச்சேரியில் இருந்து ஆயிரக்கணக்கான புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். 700-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. மருத்துவமனை தொடங்கப்பட்ட காலத்தில் இங்கு நோயாளிகள் அதிகம் வந்தனர். தற்போது இங்கு தரமான சிகிச்சை கிடைப்பது இல்லை என்று நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
முதல்வரின் முக்கியத்துவம்: இந்த மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு முதல்வர் ரங்கசாமி அதிக முக்கியத்துவம் கொடுத்து பட்ஜெட்டில் அதிக நிதியையும் ஒதுக்கி தருகிறார். ஆனால் இங்குஇருக்கும் அதிகாரிகள் சிலரின் அலட்சியத்தால் இந்த மருத்துவமனையின் தரம் கேள்விக்குறியாகியுள்ளது.
நோயாளிகள் தரப்பில் கூறுகையில், "முதல்வர் ரங்கசாமியின் கனவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இது. தொடக்கத்தில் சிறப்பாக இருந்தது. தற்போது நிலைமை மாறியுள்ளது. இங்கு பணி செய்யும் மருத்துவர்கள் சிலர் வெளியே தனியாக கிளீனிக் வைத்து நடத்து கின்றனர்.
இங்கு வரும் நோயாளிகளுக்கு வெளியில் வைத்து சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கான ‘கேன்வாஸ் மையமாக இந்த மருத்துவமனையை பயன்படுத்துகின்றனர். மதியத்துக்கு பிறகு வந்து பார்த்தால் முக்கிய சிகிச்சை கிடைப்பதில்லை. சில மருந்து, மாத்திரைகளை வெளியே வாங்கி கொள்ளும்படி கூறுகின்றனர்" என்று தெரிவிக்கின்றனர்.
கடந்த ஜூலை மாதம் இங்கு பணி செய்த ஊழியர் முத்துக்குமார் என்பவர் மின்கசிவை சரி செய்ய முயற்சி செய்த போது, ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உடல் கருகினார். உடனே அவர் இங்கேயே சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர், போதுமான சிகிச்சை வசதிகள் இல்லை என மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இங்கு வேலை செய்யும் ஊழியர்களே சிகிச்சைக்காக வெளியே செல்லும் நிலை உள்ளது.
மருத்துவமனையின் குறைபாடுகள் பற்றி ஆளுநர் தமிழிசையிடம் தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் கூட ஆளுநர் "அரசு மருத்துவர்கள் வெளியே சென்று சிகிச்சை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிகை விடுத்தத்துடன் நிற்கிறது. இந்த நிர்வாக சீர்கேடு காரணமாக, நோயாளிகள் இங்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். மாறாக அவர்கள் ஜிப்மர் மருத்துவமனைக்கும், அரசு பொது மருத்துவமனைக்கும் செல்கின்றனர்.
துர்நாற்றம் வீசும் கழிப்பறைகள்: உள்நோயாளிகள் தரப்பில் கூறுகையில், “நோயாளிகள் வார்டுகளில் உள்ள கழிப்பறைகள் நாள்தோறும் சரியாக சுத்தம் செய்யப்படுவதில்லை. துர்நாற்றம் வீசுகிறது. இங்கு தங்கி சிகிச்சை பெறுவோர், மூக்கை பொத்திக்கொண்டே கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டிய அவல நிலை உள்ளது.
சமீபத்தில், இங்கு 700-க்கும் மேற்பட்ட பல்நோக்கு ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர். அவர்களில் சிலர் சரியாக பணிக்கு வருகின்றனர். அவர்களில் பலர் சரியாக பணி செய்கிறார்களா என்பதை முதலில் கண்காணிப்பது அவசியம்" என்கின்றனர்.
பெண் நோயாளிகள் தரப்பில் கூறுகையில், "அவசர சிகிச்சை பிரிவுக்கு வரும்போது, தேவைப்படுவோருக்கு இசிஜி பரிசோதனைக்கு அனுப்புவது வழக்கம். இசிஜி அறை பெயரளவுக்கு துணியால் மறைக்கப்பட்ட ஒரு இடத்தில் உள்ளது. இது பெண்களுக்கு பாதுகாப்பாக இல்லை. அருகிலேயே ஊசி போட ஆண்கள் வரிசையாக நிற்கின்றனர்" என்கின்றனர்.
மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தரப்பில் கூறுகையில், "அரசு மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் பின்புறம் புதர் போல காட்சியளிக்கிறது. மழைநேரங்களில் இந்தப் புதர்களில் இருந்து பாம்பு போன்ற விஷஜந்துகள் மருத்துவமனை வளாகத்துக்குள் புகுந்து விடுகின்றன.
மருத்துவமனை வளாகத்தின் ஓரப்பகுதிகளில் குப்பைகளை சரியாக அகற்றுவது இல்லை. தேங்கி கிடந்து, துர்நாற்றம் வீசுகிறது. மழை காலங்களில் கழிவுநீர், மழைநீருடன் சேர்ந்து குளம் போல் தேங்கி நிற்கிறது. மருத்துவமனையின் பின்புறம் மற்றும் சவக்கிடக்கு செல்லும் வழியில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது” என்று தெரிவிக்கின்றனர்.
தங்க இடம் கிடைக்குமா? - உள்நோயாளிகளுடன் வரும் உதவியாளர்கள் படும் பாடு அதிகம். அவர்கள் கூறுகையில், "நோயாளிகளுக்கு உதவியாக இருப்பவர்கள் தங்குவதற்கு என்று இடங்கள் எதுவும் கிடையாது. அரசு மருத்துவமனை என்றாலும் உடன் வந்தவர்கள் தங்க பெரிய வளாகம் ஒன்று கட்டப்பட்டிருக்கும். ஆனால் இங்கு அப்படி இல்லை.
மருத்துவமனையின் முன்பு இரு சக்கர வாகனங்களை நிறுத்தும் இடத்திலேயே தங்குகிறோம். இரவு நேரங்களில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது" என்கின்றனர்.
மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் எந்தெந்த துறைகளுக்கு எப்படிச் செல்வது என்பது பற்றிய அறிவிப்பு பலகையோ, வழிகாட்டி விவரங்களோ இல்லாததால் நோயாளிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் மேல்தளத்துக்கு செல்லும் சாய்தள பகுதிகள் பல மூடியே கிடக்கின்றன.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ. 3.57 கோடி செலவில் உள் சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, ரூ. 67லட்சத்து 85 ஆயிரம் செலவில் மாணவர் விடுதி - ரூ.67 லட்சத்து 40 ஆயிரம் செலவில் மாணவிகள் விடுதி சீரமைக்கும் பணி ஆகியவற்றை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். அந்தப் பணிகள் மந்தமாக நடந்து வருகின்றன. இதை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுபெற்று வருகிறது.
இதைத்தாண்டி, ஒட்டு மொத்தமாக வைக்கும் முறையீடு, மருத்துவமனையில் ஊழியர்கள் அனைவரும் பணியில் இருகின்றனரா என அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் முதல்வர் ரங்கசாமி இந்த விஷயத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்
10 ஆண்டுகளாக நிரப்பப்படாத நிரந்தர செவிலியர் பணியிடங்கள்: இந்த மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் அதிக பணிச்சுமையால் தவிப்பதாக கூறுகிறார்கள். அவர்கள் கூறுகையில், "30 உள்நோயாளிகளுக்கு ஒரு செவிலியர்தான் இருக்கிறோம். தற்போது 194 பேர் பணியில் உள்ளோம். இங்கு சர்ஜரி வார்டு 2, ஆப்ரேஷன் தியேட்டர் 1, அறுவை சிகிச்சைக்கு பிறகு நோயாளிகளை கவனிக்கும் வார்டு 1, மெடிக்கல் வார்டு 2, பெண்கள் வார்டு 2, குழந்தைகள் வார்டு 2, ஐசியூ வார்டு 1, டயாலிசிஸ் வார்டு 1, எலும்பு சிகிச்சை வார்டு 1, புறநோயாளிகள் வார்டு 1, மனநோயாளிகள் வார்டு 1 என மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. மொத்தம் 18 செவிலிய அதிகாரிகள் பொறுப்பாளர்களாக உள்ளனர். வார்டுகளில் செவிலியர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் அவசர விடுமுறையை கூட எடுக்க முடிவதில்லை.
10 ஆண்டுகளாக நிரந்தர செவிலிய அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. மருத்துவக் கல்லூரி அங்கீகாரத்தை கருத்தில் கொண்டு, தேவையான மருத்துவர்களை நியமிக்கிறார்கள். ஆனால் காலியாக உள்ள 200 செவிலிய அதிகாரி பணியிடங்களை நிரப்பவில்லை. இதனால் பணிசுமை அதிகரித்துள்ளது" என்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT