Published : 12 Oct 2023 01:11 PM
Last Updated : 12 Oct 2023 01:11 PM

''தற்காப்புக்காகவே துப்பாக்கிச்சூடு'' - என்கவுன்ட்டர் குறித்து ஆவடி காவல் ஆணையர் விளக்கம்

செய்தியாளர்களைச் சந்தித்த ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர்

திருவள்ளூர்: குற்றவாளிகளான முத்துசரவணன் மற்றும் சதீஷை தனிப்படை போலீஸார் பிடிக்க முயன்றபோது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். தற்காப்புக்காக போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்று, என்கவுன்ட்டர் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் ஆய்வு செய்த ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடி முத்து சரவணன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் காயமடைந்த மற்றொரு ரவுடி சதீஷ், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணம் அடைந்தார். இந்நிலையில், என்கவுன்ட்டர் நடந்த இடத்தில், ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ரெட்ஹில்ஸ் பகுதியில் பார்த்திபன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் முத்து சரவணன் மற்றும் சண்டை சதீஷ், இவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்த தனிப்படைக்கு இரண்டு குற்றவாளிகளும் இங்கு பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்ய தனிப்படை போலீஸார் இங்கு வந்தனர்.

குற்றவாளிகளிடம் இரண்டு துப்பாக்கிகள் இருந்தது. அந்த துப்பாக்கியால் குற்றவாளிகள் தனிப்படை போலீஸாரை நோக்கி சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 காவலர்களுக்கு கைகளில் காயம் ஏற்பட்டது. தற்காப்புக்காக காவலர்கள், காவல்துறை அதிகாரிகள் அவர்களை சுட்டதில், இருவரும் படுகாயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த முத்து சரவணன் மற்றும் சண்டை சதீஷை போலீஸார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, இருவரது உடல்களும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. குற்றவாளிகள் சுட்டதில் காயமடைந்த காவல்துறையினரும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

குற்றவாளி முத்து சரவணன் மீது 6 கொலை வழக்குகள் இருக்கின்றன. அவருடைய நெருங்கிய கூட்டாளிதான் சண்டை சதீஷ். இவர் மீது 5 கொலை வழக்குகள் இருக்கின்றன. இதுதவிர, பல்வேறு கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன. இவர்களின் முக்கியமான தொழில், பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பது. பணம் கொடுக்காதவர்களை மிரட்டி கொலை செய்வது. முத்து சரவணன் ஒரு கூலிப்படையின் தலைவர். இந்த வழக்கு தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து மேல் நடவடிக்கை எடுப்பார்கள்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடி முத்து சரவணன் மற்றும் ரவுடி சதீஷ் என்று இருவர் கொல்லப்பட்டுள்ளனர். கொலை வழக்கில் பிடிக்க முயன்றபோது, போலீஸாரை தாக்கி தப்பிச் சென்றதை அடுத்து என்கவுன்ட்டரில் ரவுடிகள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். என்கவுன்ட்டரில் ரவுடி முத்து சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காயமடைந்த மற்றொரு ரவுடி சதீஷ், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணம் அடைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x