Published : 12 Oct 2023 04:54 AM
Last Updated : 12 Oct 2023 04:54 AM

தஞ்சை வேளாண் கல்லூரிக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்

சென்னை: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நினைவைப் போற்றும் வகையில் தஞ்சாவூர், ஈச்சங்கோட்டையிலுள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி ‘டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்’ என்று அழைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று 110 விதியின் கீழ் முதல்வர் அறிக்கை வெளியிட்டு பேசியதாவது: வேளாண் அறிவியலை 20-ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு ஏற்றவாறு பயன்படுத்தும் பல்வேறு ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டி உலகளவில் புகழ் பெற்றவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில், தமிழகத்தில் வேளாண் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு, வேளாண் ஆராய்ச்சி மையங்கள் அதிகளவில் உருவாக்கப்பட்டு, உணவு உற்பத்தியில் புரட்சி ஏற்படுத்தப்பட்டது. இன்றளவிலும் இந்தியாவின் வெற்றிகரமான மாடலாக இருப்பது கருணாநிதியின் ஆட்சிக் காலத்து மாடல்தான். இந்தப் பங்களிப்பில் அறிவியலாளர் எம்.எஸ். சுவாமிநாதனின் ஆலோசனைகளும் இணைந்துள்ளன.

இன்று காலநிலை மாற்றம்தான் பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. இதனை முன்கூட்டியே உணர்ந்து, காலநிலை மாற்றம் குறித்து 1969-ம் ஆண்டிலேயே இந்திய அறிவியல் மாநாட்டில் பேசி இருக்கிறார். உலகம் அதிகமாக வெப்பமாவதால் கடல் மட்டம் உயரும் என்பதையும், 1989-ம் ஆண்டு டோக்கியோ மாநாட்டில் எச்சரிக்கை விடுத்தார். கருணாநிதி மீது அளப்பரிய அன்பு கொண்டவரான எம்.எஸ்.சுவாமிநாதன், கருணாநிதி மறைவின்போது மிக உருக்கமான இரங்கல் குறிப்பையும் பதிவு செய்திருந்தார்.

கடந்த 2021-ல் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கை தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது, அவரது பணிகளைப் பாராட்டிப் பேசினேன். தமிழகத்தின் வளர்ச்சிக்கு இன்றைய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும், இந்த அரசை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுள்ள என்னையும் அவர் பாராட்டி, வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்கினார்.

‘பசுமைப் புரட்சியின் தந்தை’ என போற்றப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் கடந்த செப்.28-ம் தேதி மறைந்தபோது, அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதுடன், அரசின் சார்பில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ். சுவாமிநாதன், இந்திய அளவில் முத்திரை பதித்து, உலகளவில் புகழ் பெற்றவர். பத்மவிபூஷன், ரமோன் மகசேசே உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

அவரது நினைவைப் போற்றும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி ‘டாக்டர். எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்’ என்று அழைக்கப்படும்.

மாணவருக்கு விருது: அதேபோல், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம் வேளாண் அறிவியலில் பயிர்ப் பெருக்கம் மற்றும் மரபியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று முன்னிலை பெறும் மாணவருக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்பை அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வரவேற்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x