Published : 12 Oct 2023 05:25 AM
Last Updated : 12 Oct 2023 05:25 AM

ஜனவரி 6-ம் தேதி கோவையில் மாநாடு: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: கோவையில் வரும் ஜன.6-ம் தேதி மாநாடு நடத்தப்படும் என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு சார்பில், மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் யாருடன் கூட்டணி வைப்பது, தேர்தலுக்கு தயாராவது, கட்சியை பலப்படுத்துவது குறித்த, தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வரும் மக்களவைத் தேர்தலில் என்னென்ன கடமைகளை செய்ய வேண்டும் என்று நிர்வாகிகளிடம் தெரிவித்து இருக்கிறோம். கட்சியின் அடுத்த மாநாடு எங்கே நடத்தப்பட வேண்டும் என்று தலைமைக் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளரிடம் கலந்து பேசினோம். இதில், அடுத்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி கோவை மாநகரில் அடுத்த மாநாடு நடத்துவது என முடிவு செய்திருக்கிறோம். மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி பேச வேண்டிய அவசியம் இப்போது இல்லை.

தேர்தல் வரும்போது பார்க்கலாம். பாஜகவுடன் தொடர்பில் இருக்கிறோம். நட்பின் அடிப்படையில் பேசிக் கொண்டிருக்கிறோம் கூட்டணி குறித்து தேர்தல் வரும்போதுதான் பேசுவோம். கூட்டுப் பொறுப்பிலிருந்து தேர்தலை சந்தித்தால் தான் வெற்றி இலக்கை அடைய முடியும்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி என்பது அரசியல் அமைப்பு சட்டத்தில் இல்லை. எதிர்க்கட்சி தலைவர் மட்டும் தான் உள்ளது. மற்ற பொறுப்புகள் எனது விருப்பத்தின் அடிப்படையில் தான் கொடுக்க முடியுமே தவிர சட்டத்தின் அடிப்படையில் கொடுக்க முடியாது என்று பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளார். பேரவைத் தலைவரின் விருப்பத்தின் பேரில் தான் இருக்கை வழங்கப்படுகிறது. எதிர்க்கட்சித் துணை தலைவர் என்ற பொறுப்பு இல்லை. துணை முதல்வர் பொறுப்புக்கு சிறிய அதிகாரம் கூட கிடையாது. அது ஒரு டம்மி பதவி. அதுபோல தான் இதுவும். இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x