Published : 12 Oct 2023 05:21 AM
Last Updated : 12 Oct 2023 05:21 AM
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கோடநாடு விவகாரம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது நடந்த விவாதத்தில் ஆர்.வைத்தியலிங்கம் பேசியதாவது:
கோடநாடு பங்களாவில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி கொலை, கொள்ளை நடந்துள்ளது. 24 மணி நேரமும் மின்சாரம் தட்டுப்பாடு இல்லாத அந்த பங்களாவில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா அணைக்கப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றியவர் கொலை செய்யப்பட்டுள்ளார். படுகாயங்களுடன் தப்பிச் சென்ற நேபாளத்தை சேர்ந்தவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. 6 கொலைகள் நடைபெற்றுள்ளன.
முன்னாள் முதல்வர் வீட்டில் நடைபெற்ற கொலைகள் தொடர்பாக ஐஜி, டிஜிபி நேரில் சென்று பார்க்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 90 நாட்களில் குற்றவாளிகளை பிடிப்போம் என்று இப்போதுள்ள முதல்வர் சொன்னார். ஆனால், ஆட்சிக்கு வந்து 900 நாட்கள் ஆகிவிட்டது. இரண்டரை ஆண்டுகளாக இந்த ஆட்சி என்ன செய்கிறது. உண்மையான குற்றவாளியை கூண்டில் ஏற்ற வேண்டும். இவ்வாறு பேசினார்.
இதற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கோடநாடு வழக்கு சிபிசிஐடியிடம் உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க தொடங்கியது. சிறப்பு புலனாய்வு மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணை அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த வழக்கில் யார் யார் தவறு செய்திருக்கிறார்கள் என்பது மிக விரைவில் வரப்போகிறது. அவர் எப்படிப்பட்ட இடத்தில் இருந்தாலும், நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT