Last Updated : 12 Oct, 2023 04:10 AM

 

Published : 12 Oct 2023 04:10 AM
Last Updated : 12 Oct 2023 04:10 AM

எஸ்ஆர்எம்யு முயற்சியால் ‘வந்தே பாரத்’ ரயில் ஓட்டுநர் பணி நேரத்தில் செய்த மாற்றம் ரத்து

மதுரை ரயில் நிலையத்துக்கு வந்த ‘வந்தே பாரத்’ ரயில். படம்: நா.தங்கரத்தினம்

மதுரை: ‘வந்தே பாரத்’ ரயில் ஓட்டுநர்கள் பணி நேரத்தை 9 மணி நேரமாக மாற்றிய முடிவை திரும்பப் பெறுவதாக எஸ்ஆர்எம்யு தொழிற்சங்கத்தினரிடம் ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்தனர்.

கடந்த 24-ம் தேதி முதல் நெல்லை - சென்னை இடையே ‘வந்தே பாரத்’ துரித ரயில் இயக்கப்படுகிறது. நெல்லையிலிருந்து திருச்சி வரை நெல்லையில் பணி ஏற்கும் ஓட்டுநர்களும், திருச்சி - சென்னை வரை சென்னை ஓட்டுநர்களும், மறு மார்க்கமாக சென்னை - திருச்சி வரை திருச்சி ஓட்டுநர்களும், திருச்சி- நெல்லை வரை நெல்லை ஓட்டுநர்களும் இந்த ரயிலை இயக்கி வந்தனர்.

இந்நிலையில் அக். 4-ம் தேதி முதல் நெல்லை - சென்னைக்கு நெல்லை ஓட்டுநர்களும், சென்னை - நெல்லைக்கு மதுரை ஓட்டுநர்களும் இந்த ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஏற்கெனவே இருந்த நடைமுறையே தொடர வேண்டும் என்று வலியுறுத்தியும் எஸ்ஆர்எம்யு தொழிற்சங்க பொதுச்செயலாளர் கண்ணையா தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் மனு அளித்தார். இதைத்தொடர்ந்து மீண்டும் பழைய நடைமுறையே தொடரும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

இது குறித்து பொதுச்செயலாளர் கண்ணையா கூறியதாவது: நெல்லை - சென்னை இடையே 650 கிலோ மீட்டர் தூரத்துக்கு 7 மணி நேரம் 50 நிமிடங்களில் செல்ல கால அட்டவணை தயாரானது. ஒரு ஓட்டுநர் ரயிலை இயக்க அரை மணி நேரம் முன்பாகவே வேலை நேரம் தொடங்கும். கடைசி நிலையத்தை சென்றடைந்த பின்பு, அதிலிருந்து அரை மணி நேரத்துக்கு பிறகே பணி நிறைவடையும். இதன்படி பார்த்தால் இந்த ரயிலில் 8 மணி நேரம் 50 நிமிடம் பணியில் இருக்க வேண்டும்.

தொழிலாளர் நலச்சட்டப்படி ஒருவர் தொடர்ந்து 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும். ஆனால் ‘வந்தே பாரத்’ ரயிலில் ஓட்டுநர் பணி நேரத்தில் செய்த மாற்றத்தால் கிட்டத்தட்ட 9 மணி நேரம் பணிபுரிய வேண்டிய நிலை உள்ளது. ஓட்டுநர்கள் தொடர்ந்து 9 மணி நேரம் வேலை செய்தால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.

நெல்லை - விழுப்புரம் வரை சிக்னல்கள் ஒரு மாதிரியாகவும், விழுப்புரம் முதல் சென்னை வரை ஆட்டோமேட்டிக் சிக்னல் முறையிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. விழுப்புரம் - சென்னை இடையே 158 கிலோ மீட்டர் தூரத்துக்கு 170-க்கும் மேற்பட்ட ஆட்டோ மேட்டிக் சிக்னல்கள் உள்ளன. மிகவும் கவனமுடன் இப்பகுதியை கடந்து செல்ல வேண்டும். சிறிது கவனம் சிதறினாலும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ரயில் ஓட்டுநர்கள் தொடர்ந்து 7 மணி நேரத்துக்கு மேலாக பணிபுரியக் கூடாது என தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தோம். இதைத்தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில், ஓட்டுநரின் பணி நேரத்தில் செய்த மாற்றத்தை திரும்பப் பெறுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். பழைய நடைமுறைப்படி நெல்லை - திருச்சி, திருச்சி - சென்னை வரை தனித்தனி ஓட்டுநர்கள் இந்த ரயிலை இயக்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x