Last Updated : 11 Oct, 2023 07:27 PM

2  

Published : 11 Oct 2023 07:27 PM
Last Updated : 11 Oct 2023 07:27 PM

நியோ மேக்ஸ் வழக்கில் நீதிபதி ஆணையம் அமைக்க அரசு கடும் எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு

மதுரை: நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க தமிழக அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிறுவனம் பல்வேறு போலி நிறுவனங்கள் பெயரில் பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், நியோ மேக்ஸ் பிரச்சினையில் சுமூக தீர்வு ஏற்படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கக் கோரி நியோ மேக்ஸ் இயக்குநர்கள் பழனிச்சாமி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி ஆகியோர் வாதிடுகையில், ''ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்தால் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் விரைவில் நிவாரணம் வழங்கிவிடலாம் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது உண்மையல்ல. நிதி நிறுவன மோசடியில் 1999-ல் அமைக்கப்பட்ட ஆணையம் முதல் இதுவரை பல்வேறு ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படவில்லை. பல ஆணையங்களில் இருந்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் விலகிச் சென்றுவிட்டனர்.

நியோ மேக்ஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், 32048 முதலீட்டாளர்கள் உள்ளதாகவும், புகார் அளித்த ஜெயசங்கரீஸ்வரனுக்கு 15,515 சதுர அடியும், ரூ.25 லட்சமும் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் கணக்கீடு செய்தால் 32,048 முதலீட்டாளர்களுக்கு கொடுக்க 49 கோடியே 72 லட்சம் சதுர அடி நிலம் தேவைப்படும். ஆனால் மனுதாரர்கள் தரப்பில் தங்களிடம் டிடிசிபி அனுமதி பெற்ற இடம் 5 கோடியே 9 லட்சம் சதுர அடி மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் வைத்திருக்கும் நிலத்தை 32,048 முதலீட்டாளர்களுக்கு நிறுவனம் பிரித்து தருவதாக சொல்கிற 2 கோடியே 23 லட்ச சதுர அடியை சரியாக பிரித்து கொடுப்பதாக இருந்தால் ஒருவருக்கு 697 சதுர அடிதான் கொடுக்க முடியும். இதற்கு முதலீட்டாளர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.

சட்டத்துக்கு புறம்பாக நீதிபதி ஆணையம் அமைக்க முடியாது. புலன் விசாரனை முழுமை பெற வேண்டும். இதுவரை 667 மட்டுமே புகார் அளித்துள்ளார். ஆனால் உத்தேசமாக 32,048 பேர் முதலீடு செய்துள்ளார்கள் என நிறுவனம் கூறியுள்ளது. இதனால் விசாரணைக்கு பிறகே எத்தனை முதலீட்டாளர்கள் உள்ளனர் என்பது தெரியவரும். முதலீட்டாளர்கள் முதலீடு செய்த பணம் எவ்வளவு என்பதையும் நிறுவனம் தெரிவிக்கவில்லை. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்தால் போலீஸ் விசாரணை பாதிக்கும். இதனால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்றனர்.

முதலீட்டாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிடுகையில், ''ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க கோருவது திசை திருப்பும் வேலையாகும். இதனால் முதலீட்டாளர்களுக்கு நிவாரணம் கிடைக்காது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்றனர். பின்னர் வழக்கின் தீர்ப்பை அக்டோபர் 20-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x