Published : 11 Oct 2023 05:00 PM
Last Updated : 11 Oct 2023 05:00 PM

ரூ.5.16 லட்சம் கோடி வரி பங்களிப்புக்கு வெறும் ரூ.2.08 லட்சம் கோடி வரி பகிர்வு: தமிழக அரசு குற்றச்சாட்டு

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை காண வந்த பள்ளி மாணவர்கள். | படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: "நிதியாண்டு 2014-15 முதல் 2021-22 வரை, மத்திய அரசின் நேரடி வரியில், தமிழகத்தின் பங்களிப்பு மட்டும் ரூ.5.16 லட்சம் கோடி. ஆனால், வரி பகிர்வாக இந்த காலக்கட்டத்தில் தமிழகத்துக்கு கிடைத்தது வெறும் ரூ.2.08 லட்சம் கோடிதான். இதே பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நிலைமைகள் வேறாக இருக்கிறது" என்று சட்டப்பேரவையில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். பின்னர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ், தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி டாக்டர். எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும் என்று அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விகளுக்கு சபாநாயகர் அளித்த விளக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து சட்டப்பேரவையில் தமிழக அரசின் முதல் துணை மதிப்பீடுகளை தாக்கல் செய்து மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது: "வருவாயைப் பெருக்கக்கூடிய நோக்கில், கனிமங்களுக்கான அரசின் கட்டணங்களை அதிகரித்தல், மோட்டார் வாகன வரிகள் மற்றும் அபராதங்களை அதிகரித்தல், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு மற்றும் கணினிமயமாக்கல் மூலம் வரி நடைமுறைகளிலே தொழில்நுட்பங்களை உருவாக்கி வரி வருவாயை அதிகரித்தல், சரக்கு மற்றும் சேவை வரியை அதிகரித்தல் மற்றும் மதுபான விற்பனை, பத்திரப்பதிவு, சுரங்கத் தொழில் ஆகியவற்றில் தரவுகளைப் பயன்படுத்துவதன் வாயிலாக வரி வசூல் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் அரசின் வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளை நிதித்துறை மேற்கொண்டிருக்கிறது. இந்த தொடர் நடவடிக்கைகளின் விளைவாக, இந்த நியாண்டில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களின் முறையே, 10.6 சதவீதம் மற்றும், 13.78 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

30.6.2022 முதல் ஜிஎஸ்டி வரி முடிவுற்றதன் விளைவாக, தமிழக அரசுக்கு பெருமளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில், ஜிஎஸ்டி இழப்பீடாக 9,603 கோடி ரூபாயை மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு பெற்றிருக்கக் கூடிய நிலையில், நடப்பாண்டில், 3503 கோடி ரூபாய் மட்டும்தான் இப்போது பெற்றிருக்கிறோம். இதன் விளைவாக மத்திய அரசின் உதவி மானியங்கள், 36.59 சதவீதமானது அளவு குறைந்திருக்கிறது.

ஜிஎஸ்டி வரி இழப்பீடாக மேலும் ஆயிரம் கோடி ரூபாய் பெறப்படும் என எதிர்பார்க்கும் நிலையில், 2022-23ம் நிதியாண்டு தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை அளித்தபிறகு, இறுதித் தொகைக்கான தீர்வு எய்தப்பட்டுவிடும் என்று நம்புகிறோம். இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசிடமிருந்து பெறுவதற்கு ஏதுவாக அந்த முதல் காலாண்டுக்குள் தனியாகவே ஒரு தணிக்கை முறை ஏற்படுத்தி தர வேண்டு என நிதியமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நேரடி வரி வருவாயைப் பொறுத்தமட்டில், மத்திய அரசின் நேரடி வரி விதிப்பில் தமிழகத்தின் பங்களிப்பில் தொடர்ந்து நாம் முன்னணியில் இருந்து வருகிறோம். ஆனால், அந்த பங்களிப்புக்கு நிகரான பகிர்வினை பெறவில்லை. மத்திய அரசுக்கு வரி வருவாயாக தமிழகத்தில் இருந்து செலுத்தக்கூடிய ஒரு ரூபாய்க்கு ஈடாக 29 பைசா மட்டுமே நமக்கு திரும்பக் கிடைக்கிறது. மாறாக, மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக ஆளும் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில், அம்மாநிலம் செலுத்து வரி ஒரு ரூபாய்க்கு ஈடாக அவர்களுக்கு 2.73 ரூபாய் கிடைக்கிறது.

நிதியாண்டு 2014-15 முதல் 2021-22 வரை, மத்திய அரசின் நேரடி வரியில், தமிழகத்தின் பங்களிப்பு மட்டும் ரூ.5.16 லட்சம் கோடி. ஆனால், வரி பகிர்வாக இந்த காலக்கட்டத்தில் தமிழகத்துக்கு கிடைத்தது வெறும் 2.08 லட்சம் கோடிதான். இதே பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நிலைமைகள் வேறாக இருக்கிறது. உ.பி மாநிலத்தின் பங்களிப்பு ரூ.2.24 லட்சம் கோடி. ஆனால், அவர்களுக்கு வரி பகிர்வாக கிடைத்திருப்பது ரூ.9.04 லட்சம் கோடி. அவர்கள் செலுத்திய வரியைவிட, வரி பகிர்வு 4 மடங்கு அதிகமாக கிடைத்திருக்கிறது. இதுதான் ஒரு கண்ணில் வெண்ணெய்யும் ஒரு கண்ணிலே வைக்கும் மத்திய அரசின் செயல்பாடாக இருக்கிறது.

அதுமட்டுமல்ல, மத்திய நிதிக் குழு ஒதுக்கீட்டில் தமிழகம் தொடர்ச்சியாக நிதி இழப்பைச் சந்தித்து வருகிறது. 15 வருடங்களாக தமிழகத்தின் பங்களிப்புக்கு நிகராக இருக்கக்கூடிய நிதி ஒதுக்கீடு தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. அதாவது, 12வது நிதிக்குழுவில், 5.305 சதவீதமாக இருந்த நிதி ஒதுக்கீடு 12வது நிதிக்குழுவுக்கு வரும்போது 4.079 சதவீதமாக குறைந்து வருகிறது.

மக்கள்தொகை கணக்கெடுப்பை பார்த்தால், இந்தியாவினுடைய மக்கள் தொகையில், 6.124 சதவீதமாக இருக்கும் தமிழகத்துக்கு நமக்கு கிடைக்கும் நிதி சதவீதம் நமது மக்கள் தொகைக்கு இணையாகவோ, நேராகவோ இல்லை. வெறும் 4.079 சதவீதம் தான் நிதி ஒதுக்கீடு நமக்கு வந்திருக்கிறது. இது எந்த வகையில் நியாயம்?

வட மாநிலங்களுக்கும், தென் மாநிலங்களுக்கும் இருக்கும் இந்த வேறுபாட்டுக்கும், வடமாநிலங்களுக்கு சாதகமாக அமைவதற்கான காரணம், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டத்தை மிகப் பெரிய அளவில் நிறைவேற்றியது. குறிப்பாக தமிழகத்தில் அதை மிகத் தீவிரமாக அந்த திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறோம். 72-ம் ஆண்டில், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டதன் காரணமாக, இன்றைக்கு நாம் பழிவாங்கப்படுகிறோம் என்பதுதான் உண்மை. இது மிகப் பெரிய அளவில், நிதி ஒதுக்கீட்டில் மிகப்பெரிய ஒரு பின்னடைவை அது ஏற்படுத்தியிருக்கிறது.

பேரிடர் நிவாரண நிதியிலும்கூட, தமிழகம் கிட்டத்தட்ட 64.65 சதவீதம்தான் மத்திய அரசிடமிருந்து நாம் பெறமுடிகிறது. மாறாக, 14வது நிதிக்குழு காலத்தைவிட, 15வது நிதிக்குழு காலத்தில் ஒரு ஒப்பீட்டுக்காக கூறுகிறேன். உத்தரப் பிரதேசம் 15வது நிதிக்குழுக் காலக்கட்டத்தில் 214.39 சதவீதம், பிஹார் 231.23 சதவீதம் பெற்றுள்ளது. தென் மாநிலங்களின் நிலை என்ன? வட மாநிலங்களின் நிலை என்ன? இதற்கெல்லாம் மத்திய அரசுதான் காரணம்.

இதைவிட பெரிய கொடுமை ஜிஎஸ்டி வரி விதிப்பு. ஜிஎஸ்டியைப் பொறுத்தமட்டில், 2017 ஜூலை 1ம் தேதி தமிழகம் ஜிஎஸ்டியை கொண்டு வந்தது. இதனால், மாநிலங்களுக்கு இருக்கக்கூடிய நிதி சுயாட்சியை இழக்கக்கூடிய நிலை உருவானது. எந்த பொருளின் மீது வரி விதிக்கலாம்? எந்த அளவில் அந்த வரி விகிதங்கள் அமையலாம்? அந்த வரியைப் பெறுவதற்கான நடைமுறைகள் என்ன என்பதையெல்லாம் தீர்மானிக்கக் கூடியது மாநில அரசின் அதிகாரங்கள். ஆனால், ஜிஎஸ்டி கொண்டு வந்தபிறகு இதை இழந்திருக்கிறோம்.

மாநிலங்களுக்கான வருவாய் பாதுகாக்கப்பட்ட அளவில் இருக்கும் என்ற உத்தரவாதம் மத்திய அரசால் கொடுக்கப்பட்டது. 2017 முதல் 2021 வரை ஜிஎஸ்டியால் வரும் வருவாய் இழப்புகளுக்கு இழப்பீடு அளிக்கப்படும் என்று கூறினார்கள். 5 வருடம் இழப்பீடு கொடுத்தார்கள். ஆனால், 5 ஆண்டுகள் அந்த இழப்பீடு பெற்ற பிறகும், உரிய வளர்ச்சியை மாநிலங்கள் பெற்றுள்ளதா என்றால், அந்த வளர்ச்சியைப் பெறவில்லை.

2023-24-ல், மாநிலங்களுக்கு என்று இருக்கக்கூடிய பாதுகாக்கப்பட்ட வருவாயில் இருந்து தமிழகத்துக்கு மட்டும் ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பு என்பது ரூ.20,000 கோடியாக இருக்கிறது. இந்த காரணங்களை விளக்கிக் கூறி, இன்னும் 2 ஆண்டுகள் இழப்பீட்டை நீட்டித்து வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தோம். கடுமையான நிதிச் சூழலை எடுத்துக் கூறியும் மத்திய அரசு இழப்பீட்டுக் காலத்தை நீட்டித்து தரவில்லை" என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x