Last Updated : 11 Oct, 2023 05:22 PM

3  

Published : 11 Oct 2023 05:22 PM
Last Updated : 11 Oct 2023 05:22 PM

“சந்திர பிரியங்காவின் புகார் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதிய வேண்டும்” - நாராயணசாமி

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி | கோப்புப் படம்

புதுச்சேரி: “பெண் அமைச்சர் சந்திர பிரியங்காவின் புகார் குறித்து வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

புதுவை மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "மாநில அந்தஸ்து விவகாரத்தில் புதுவைக்கு சிறப்பு மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்பதுதான் காங்கிரஸின் நிலைப்பாடாக இருந்தது. சிறப்பு மாநில அந்தஸ்து கிடைத்தால் 90 சதவீத மானியம் கிடைக்கும் எனக் கருதினோம். அதன்பின் நிலைப்பாட்டை மாற்றி மாநில அந்தஸ்து கேட்டோம். யூனியன் பிரதேசத்துக்கு கடன் வாங்கும் அதிகாரம் இல்லை. இதனால் ரங்கசாமி புதுவைக்கு தனி கணக்கு தொடங்கினார். இதனால் 70 சதவீத மானியம் 30 சதவீதமாக குறைந்தது. அதன் பின்னர்தான் மாநில அந்தஸ்து கோரிக்கையை ரங்கசாமி ஆரம்பித்தார். அவர் மாநில அந்தஸ்தில் உறுதியாக இல்லை.

2011 முதல் 2016 வரை ஆட்சியில் அவர் இருந்தார். 2 ஆண்டு மோடி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தார். அப்போது மாநில அந்தஸ்து பெறவில்லை. 2016-ல் காங்கிரஸ் ஆளும் கட்சியானபோது மாநில அந்தஸ்து தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு சென்றபோது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த ரங்கசாமி வரவில்லை. அவருக்கு அழைப்பு விடுத்தும், வரவில்லை.

பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்தித்து கேட்டபோது, கோப்பை கிடப்பில் போட்டனர். காங்கிரஸ் ஆட்சிக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக மாநில அந்தஸ்து தராமல் தடுத்து நிறுத்தினர். ரங்கசாமி முதல்வராகி இரண்டரை ஆண்டுகளாகிறது. மாநில அந்தஸ்து பெற பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளேன் என ரங்கசாமி கூறினார். புதுவைக்கு வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றார்.

இதில் யார் குற்றவாளி? பிரதமரை பார்க்க எத்தனை முறை டெல்லிக்கு சென்றார்? மாநில அந்தஸ்து தர முடியாது என மத்திய அரசு கூறிய பிறகு, எதிர்க்கட்சிகள் மீது பழிபோடுகிறார். புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறும் எண்ணம் ரங்கசாமிக்கும் இல்லை, வழங்கும் எண்ணம் மத்திய பாஜக அரசுக்கும் இல்லை. ரங்கசாமி சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார்.

ஒரு பெண் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 4 நாட்களுக்கு முன்பு முதல்வர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநரை சந்தித்து அமைச்சர் சந்திர பிரியங்காவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். திருமுருகனை அமைச்சராக்க வேண்டும் என கடிதம் அளித்துள்ளார். அந்தக் கடிதம் உள்துறை அமைச்சகம் அனுப்பப்பட்டது. இந்தக் கடிதம் ஏற்கப்பட்டு, புதுவை அரசுக்கு வந்துள்ளது. பெண் அமைச்சரை அசிங்கப்படுத்தி உள்ளனர். அமைச்சர்கள், முதல்வரின் செயல்பாடுகள் சரியாக உள்ளதா? ஒரு பெண் அமைச்சர் மனம் எவ்வளவு புண்பட்டிருந்தால் இப்படி அறிக்கை கொடுத்திருப்பார்? மன வேதனையோடு அந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.

ஆண் அதிகார வர்க்கம் என்னை செயல்படவிடாமல் தடுத்துள்ளது. தனிப்பட்ட பிரச்சினையை முன்வைத்து பழிவாங்குகின்றனர். சாதி, பாலின ரீதியில் அழுத்தம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். என்.ஆர்.காங்கிரஸ், பாஜக சுயரூபத்தை அமைச்சரின் கடிதம் காட்டுகிறது. இது மிகப் பெரும் குற்றச்சாட்டு. இது குறித்து தலித் வன்கொடுமை சட்டத்தில் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் பெண்கள் விரோத ஆட்சி நடக்கிறது" என நாராயணசாமி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x