Last Updated : 11 Oct, 2023 04:07 PM

 

Published : 11 Oct 2023 04:07 PM
Last Updated : 11 Oct 2023 04:07 PM

“சந்திர பிரியங்காவிடம் பறித்த அமைச்சர் பதவியை பண முதலாளிக்குத் தர திட்டம்” - காங். குற்றச்சாட்டு

எம்.பி வைத்திலிங்கம் | கோப்புப் படம்

புதுச்சேரி: “புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்காவின் பதவி பறிப்பு குறித்த காரணத்தை முதல்வர் ரங்கசாமி வெளிப்படையாக தெரிவிக்காமல் மவுனமாக உள்ளது ஏன்?” என்று காங்கிரஸ் மாநிலத் தலைவரும், எம்.பி.யுமான வைத்திலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி இன்று செய்தியாளர்களிடம் இன்று கூறியது: "புதுவை முதல்வருக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் எந்த அக்கறையும் இல்லை. சமூக தலைவர்களிடம் பேசும்போது மாநில அந்தஸ்தை முன்னாள் முதல்வர்கள் எதிர்க்கின்றனர். நானோ, நாராயணசாமியோ மாநில அந்தஸ்தை எதிர்க்கவில்லை. மாநில அந்தஸ்து விவகாரத்தில் முதல்வர் நிலைப்பாடு என்ன என தெரியவில்லை. புதுவை அரசு சார்பில் முதல்வர், அமைச்சர்கள், பேரவைத் தலைவர் ஏன் டெல்லிக்கு செல்லவில்லை? தற்போது மத்திய அரசு மாநில அந்தஸ்து வழங்கவில்லை என கூறிய பிறகு டெல்லிக்கு செல்வோம் என்கின்றனர். இன்னும் 2 ஆண்டுகளிலாவது மாநில அந்தஸ்து பெறுவார்களா, இல்லையா என தெரிவிக்க வேண்டும்.

புதுவையில் ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் விடுதி செயல்படவில்லை. பெண் குழந்தைகள் கல்விக்கு எந்த உதவியும் அரசு செய்யவில்லை. குடிசை மாற்றுவாரியம் மூலம் புதிதாக ஒருவருக்கு கூட உதவித்தொகை வழங்கவில்லை. பாட்கோ மூலம் எந்த கடனுதவியும் அளிக்கவில்லை. கடன்களை தள்ளுபடி செய்யவும் நடவடிக்கை இல்லை. என்.ஆர்.காங்கிரஸ் அரசு ஆதிதிராவிட மக்களை அழித்து வருகிறது. சமுதாய அடிப்படையில் ஆதிதிராவிடர்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடை எடுத்துள்ளார்.

பெண்களுக்கு எந்த உரிமையும் தரக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக ரங்கசாமி உள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. ஆனால், பாஜக கூட்டணி ஆட்சியில் ஒரு பெண் அமைச்சரை நீக்குகின்றனர். இந்த பதவி நீக்கம் ஆணாதிக்கத்தின் செயல்பாடு. ஆணாதிக்க ஆட்சியாகவே இதைப் பார்க்கிறோம். பாஜக 33 சதவீதம் என சொல்வதே ஏமாற்று வேலை என்பதற்கு இது உதாரணம்.

பெண்களையும், மக்களையும் திசை திருப்பி பழி வாங்கும் வகையில் புதுவையில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. அதிகாரம் இல்லை என கூறும் முதல்வர் தனது அதிகாரத்தை பகிர்ந்து தர மறுக்கிறார். எந்த அமைச்சர்களுக்கும் அதிகாரம் தருவது கிடையாது. இவர் மட்டுமே முதல்வராக முழு அதிகாரத்தையும் வைத்துக்கொண்டுள்ளார். அதுவும் போதாது என மாநில அந்தஸ்து அதிகாரம் வேண்டும் என கேட்கிறார்.

பெண் அமைச்சரிடம் பதவியை பறித்து பண முதலாளிக்கு தர முதல்வர் நினைக்கிறார். இந்த வியாபாரத்தின் மூலம் தனது வசதியை பெருக்கிக கொள்ள நினைக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாஜக கொள்கை பெண்களை உறுப்பினராக நினைக்காமல் ஒரு வியாபார பொருளாக நினைக்கின்றனர். இதற்கு பெண் அமைச்சரின் மாற்றம் உதாரணம்.

பெண் உரிமை பேசும் பெண் ஆளுநர், ஒரு பெண்ணின் பதவியை பறிப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம். இதை வன்மையாக கண்டிக்கிறோம். அமைச்சர் பதவி நீக்கம் குறித்த காரணத்தை முதல்வர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அமைச்சர் பதவி நீக்கம் குறித்து முதல்வர் ஏன் பதில் கூறவில்லை? ஏன் மவுனமாக உள்ளார்?

முதல்வர் ஆண் ஆதிக்கம் செலுத்துபவர். பெண்களுக்கு சம உரிமை தருவதில் அவருக்கு எந்த ஒப்புதலும் கிடையாது. புதுவையில் முழுமையாக பாஜக ஆட்சிதான் நடக்கிறது. அமைச்சர் பதவிக்காகவோ, அவரது கட்சிக்காவோ இல்லாமல் ஒரு பெண் என்பதால் சந்திர பிரியாங்காவின் உரிமைக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம்” என்று வைத்திலிங்கம் கூறினார்.

முன்னதாக, புதுச்சேரியின் ஒரே பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். சாதி ரீதியாகவும், பாலின ரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளானதாக தான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பெரும்பான்மை மக்களுக்கு துரோகம் செய்யவேண்டாம் என்றும் முதல்வருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வர், துணைநிலை ஆளுநருக்கு தனித்தனியே கடிதங்களை அனுப்பினார். இதையடுத்து, ராஜினாமா கடிதத்தை முதல்வர் ரங்கசாமி ஏற்றுக்கொண்டு, அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x