Published : 11 Oct 2023 02:32 PM
Last Updated : 11 Oct 2023 02:32 PM
சென்னை: "ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 3 பேர் நீக்கம் குறித்து 10 முறை கடிதம் கொடுத்தும், சபாநாயகர் எங்களது கோரிக்கையை ஏற்க மறுக்கிறார். சபாநாயகர் இருக்கை ஒரு புனிதமான ஆசனம். அதில் அமர்ந்து அவர் நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும்" என்று சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. வினாக்கள் விடைகள் நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். பின்னர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ், தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும் என்று அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விகளுக்கு சபாநாயகர் அளித்த விளக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவை வளாகத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "சட்டப்பேரவை துணைத் தலைவர் இருக்கை நியமனம் குறித்தும், அதிமுகவில் இருந்து 3 பேர் நீக்கப்பட்டது குறித்தும், 10 முறை சட்டப்பேரவைத் தலைவரின் அறையில் கடிதம் கொடுத்திருக்கிறோம்.
19.7.2022 அன்று துணைத் தலைவர் நியமனம் குறித்து கடிதம் கொடுத்திருக்கிறோம். 11.10.2022 கடிதம் கொடுத்திருக்கிறோம். நினைவூட்டல் கடிதம் 14.10.2022 அன்று கொடுத்திருக்கிறோம். அதேபோல், நினைவூட்டல் கடிதம் 18.10.2022 அன்றும் கொடுத்திருக்கிறோம். 10.01.2023 அன்று நினைவூட்டல் கடிதம் கொடுத்திருக்கிறோம். அதுமட்டுமின்றி, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை 23.02.2023 அன்று சபாநாயகரிடம் கொடுத்திருக்கிறோம். அதோடு, 28.03.2023 தேதியிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலையும் அவரிடம் வழங்கியிருக்கிறோம்.
25.08.2023 அன்று, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலையும் சபாநாயகரிடம் கொடுத்திருக்கிறோம். 21.09.2023 அன்று நினைவூட்டல் கடிதம் வழங்கினோம். 9.10.2023 அன்றும் மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதத்தைக் கொடுத்திருக்கிறோம். பத்து கடிதங்கள் கொடுக்கப்பட்டும்கூட, எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதற்கான காரணத்தையும் தெளிவுபடுத்தவில்லை. சபாநாயகரை எங்கள் கட்சியைச் சேர்ந்த கொறடா உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் நேரில் சந்தித்து கேட்டபோதுகூட அதற்கு சரியான பதிலை அவர் அளிக்கவில்லை.
எனவே, இதுகுறித்து நான் சட்டமன்றத்தில் பேசினேன். எங்களது கருத்துகளை முழுமையாக தெரிவிக்க சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. எங்களுடைய கோரிக்கை நியாயமான கோரிக்கை. இன்றைக்கு காங்கிரஸ் கட்சியில் 18 எம்எல்ஏக்கள்தான் உள்ளனர். 18 உறுப்பினர்கள் இருக்கும் அந்த கட்சிக்கு தலைவர் பதவி கொடுக்கின்றனர். துணைத் தலைவர் பொறுப்பு கொடுக்கப்பட்டு, தலைவர் அருகில் அமர வைத்துள்ளனர்.
ஆனால், நாங்கள் வைக்கும் கோரிக்கையை சபாநாயகர் நிராகரிக்கிறார். சபாநாயகருக்கான மரபை அவர் கடைபிடிக்கவில்லை. மேலும், அவர் தனக்கு தனிப்பட்ட அதிகாரம் இருப்பதாக கூறுகிறார். அதில் நாங்கள் குறுக்கிடவில்லை. அது சட்டப்பேரவையின் வரம்புக்கு உட்பட்டது. எந்த உறுப்பினரை எங்கு அமரவைக்க வேண்டும் என முடிவு செய்வது சபாநாயகரின் தனிப்பட்ட உரிமைதான். இருந்தாலும், எதிர்க்கட்சித் தலைவரின் அருகில்தான், துணைத் தலைவரை அமர வைப்பது சட்டப்பேரவையின் நீண்டகால மரபு. இதுவரை அப்படித்தான் இருந்துள்ளது.
ஆளுங்கட்சி மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களை சபாநாயகர் ஆங்காங்கே அமரவைப்பார். அதில், நாங்கள் தலையிடவில்லை. ஆனால், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் மரபுப்படி நியமிக்கப்படவும் இல்லை. இருக்கை ஒதுக்குவதையும் சபாநாயகர் நிராகரிக்கிறார். அதைத்தான் நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால், அவர் நிராகரிக்கிறார். சபாநாயகர் இருக்கை ஒரு புனிதமான ஆசனம். அதில் அமர்ந்து அவர் நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும்.
சட்டமன்றத்தில் நான் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள், கேள்வி எழுப்பும்போது, அமைச்சர்களிடமிருந்தும், முதல்வரிடமிருந்து பதில்வர வேண்டும் என எண்ணுகிறோம். ஆனால், பெரும்பாலான கேள்விகளுக்கு சபாநாயகரே பதில் சொல்லிவிடுகிறார். இதனால், அமைச்சர் மற்றும் முதல்வருக்கும் பதில் சொல்லவேண்டிய வேலையே இல்லாமல் போய்விடுகிறது. இதனால், எந்த பிரயோஜனமும் கிடையாது.
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மக்கள் பிரச்சினைகளை அவையின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம். அப்படி கொண்டுவரும்போது, சபாநாயகர் குறுக்கிட்டு அதற்கு அவரே பதில் சொல்லி முடித்துவிடுகிறார். அமைச்சர்கள் பதில் சொல்வது இல்லை. இதனால், நாங்கள் வைத்த கோரிக்கை நிறைவேற்ற முடியாமல் போகிறது. மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாமல் போகிறது. இது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.
இன்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் நியமனம் மற்றும் இருக்கை குறித்தும், நீதிமன்றமே அதிமுகவில் இருந்து 3 சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டது செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பின்படி, அந்த மூவரையும் சபாநாயகர் எக்கட்சியையும் சாராதவர்கள் என்று அறிவிக்க வேண்டும். இதை அறிவிப்பதில் என்ன இருக்கிறது. ஆனால், எந்த மரபும் கடைபிடிக்கப்படுவதில்லை" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT