Published : 11 Oct 2023 05:38 AM
Last Updated : 11 Oct 2023 05:38 AM

முஸ்லிம் கைதிகள் முன்விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் - பழனிசாமி கடும் வாக்குவாதம்

சென்னை: முஸ்லிம் கைதிகள் முன்விடுதலை தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில் உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு முதல்வர் பதில் அளித்து பேசினார். அப்போது நடந்த வாதம்:

முதல்வர் ஸ்டாலின்: முஸ்லிம் கைதிகள் முன்விடுதலை குறித்து மிகுந்த அக்கறையுடன் பேசும் எதிர்க்கட்சி தலைவர், 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபோது இந்த விஷயத்தில் கண்ணை மூடிக்கொண்டு இருந்தது ஏன்?

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் விடுதலையை, அதிமுக ஆட்சியில் இருந்தபோதுதான் செய்தோம்.

முதல்வர்: முஸ்லிம்கள் மீது அப்போது இல்லாத அக்கறை, இப்போது எப்படி வந்தது என்பதுதான் கேள்வி.

பழனிசாமி: 7 பேர் விடுதலைக்கு காரணம் அதிமுக அரசு.

முதல்வர்: நீங்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும், திமுக ஆட்சியில்தான் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

பழனிசாமி: நளினி தவிர்த்து மற்றவர்களின் தண்டனையை நிறைவேற்றலாம் என்று திமுக ஆட்சியில்தான் அமைச்சரவையில் அன்று கையெழுத்திட்டனர். அப்படிப்பட்டவர்கள்தான் அவர்களை விடுதலை செய்யவும் போராட்டம் நடத்தினர்.

பேரவை தலைவர்: நான் பதில் அளிக்க விடாமல் உங்களை மறிக்கவில்லை. ‘முதல்வர் பேசி முடித்ததும், யாருக்கும் அனுமதி இல்லை’ என்றும் கூறவில்லை. முதல்வர் பதில் அளித்த நிலையில், பேசி முடித்துள்ளீர்கள். உங்களுக்கு முன்பே வாய்ப்பு கேட்டதால், ஜவாஹிருல்லா பேச வாய்ப்பு அளிக்கிறேன். அவர் பேசியதும், உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன்.

(இதற்கிடையே, ஆட்சி குறித்து பழனிசாமி பேசியதால், திமுகவில் எதிர்ப்பு கிளம்ப, சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், பழனிசாமி பேச பேரவை தலைவர் அனுமதி அளித்தார்.)

பழனிசாமி: முஸ்லிம்களுக்கு நாங்கள் எதுவும் செய்யவில்லை என்பதுபோல முதல்வர் குற்றம்சாட்டுகிறார். பாபர் மசூதி சம்பவத்தின்போது, நாடு முழுவதும் பற்றியெரிந்த நிலையில், தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. அமைதி பூங்காவாக இருந்தது.

ஜவாஹிருல்லா: முதல்வர் கூறுவதுபோல, கடந்த அதிமுக ஆட்சியில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை.(அதிமுகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.)

முதல்வர்: உள்ளபடியே அக்கறை இருந்தால், முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய அதிமுக சார்பில் ஆளுநரை சந்தித்து அழுத்தம் தர தயாராக இருக்கின்றனரா?

அப்பாவு: முதல்வராக இருந்தவர், எதிர்க்கட்சி தலைவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். இவ்வளவு அனுமதித்த பிறகும், வெளிநடப்பு செய்வது என்ன நியாயம்?

முதல்வர்: தருமபுரியில் பேருந்தில் பயணித்த மாணவிகளை உயிரோடு எரித்தவர்களை, எம்ஜிஆர் நூற்றாண்டை முன்னிட்டு முன்விடுதலை செய்த உங்கள் (அதிமுக) ஆட்சியில், முஸ்லிம் கைதிகளை முன்விடுதலை செய்ய ஏன் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. ஆட்சியில் இருந்தபோது, முஸ்லிம் கைதிகள் முன்விடுதலைக்கு நடவடிக்கை எடுக்காமல், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு என எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்த அதிமுகவுக்கு தற்போது முஸ்லிம் கைதிகள் மீது பாசம் ஏன் என்பது அனைவருக்கும் தெரியும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

இந்நிலையில், பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு, செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: அதிமுகவுக்கு முஸ்லிம்கள் மீது என்ன அக்கறை இருக்கிறது என்று முதல்வர் கேட்கிறார். கடந்த 1997 திமுக ஆட்சியில் கோவை உக்கடத்தில் காவலர் கொல்லப்பட்ட விவகாரத்தில் போலீஸார், ரவுடிகளை அனுப்பி அங்குள்ள முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 19 பேர் உயிரிழந்தனர். ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்கு காரணம் அதிமுக அரசுதான். அதிமுக அரசு அவர்களை காப்பாற்றி இருக்காவிட்டால் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கும். சிறுபான்மையினருக்கு அதிமுக எப்போதும் பாதுகாப்பாக உள்ளது. இவ்வாறு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x