Published : 11 Oct 2023 05:51 AM
Last Updated : 11 Oct 2023 05:51 AM

எம்எல்ஏக்கள் ஓய்வூதியம், வணிகவரி சமாதான் திட்டம் உள்ளிட்ட 7 மசோதாக்கள் பேரவையில் அறிமுகம்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று எம்எல்ஏக்களுக்கான ஓய்வூதிய உயர்வு, வணிகவரித் துறையின் சமாதான் திட்டம் உள்ளிட்ட 7 சட்டத்திருத்த மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு, சமாதான் திட்டம் உள்ளிட்ட 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று 7 சட்டத்திருத்த மசோதாக்கள் அமைச்சர்களால் அறிமுகம் செய்யப்பட்டன. இந்தாண்டு ஜனவரி மாதம் 19-ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘ சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்படும்’ என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தை மேலும் திருத்துவதற்கான திருத்த சட்ட முன்வடிவை நேற்று அமைச்சர் துரைமுருகன் அறிமுகம் செய்தார்.

இதையடுத்து, தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் பட்டியலில்7 பல்கலைக்கழகங்களை சேர்ப்பது தொடர்பான பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் க.பொன்முடி அறிமுகம் செய்தார்.

ஆயத்தீர்வை: மேலும், மாநிலத்தின் வருவாயை பெருக்கும் வகையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மது மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வையின் அதிகபட்ச தொகையை சாதாரண வகைக்கு ஒரு லிட்டருக்கு ரூ.250-லிருந்து ரூ.500-ஆகவும், நடுத்தர வகைகளுக்கு லிட்டருக்கு ரூ.300 லிருந்து ரூ.600-க்கும், உயர்தர வகைகளுக்கு ரூ.500-லிருந்து ரூ.1000 ஆகவும் உயர்த்தும் வகையிலான அரசின் முடிவுக்கு செயல்வடிவம் கொடுக்கும் சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் சு.முத்துசாமி அறிமுகம் செய்தார்.

தொடர்ந்து பட்டுப்புழு விதை உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகம் தொடர்பான சட்டத்தில் பட்டு வளர்ச்சி மேம்பாடு மற்றும் விலை உறுதிப்படுத்தும் நிதியத்துக்காக அமைக்கப்பட்ட குழுவுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வடிவை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிமுகம் செய்தார்.

சமாதான் திட்டம்: வணிகர்கள் சிரமங்களை தணிக்கவும், வரி வழக்குகளை குறைக்கவும், 2021 மார்ச் 31 அல்லது அதற்கு முன் செய்யப்பட்ட 2017-18 வரையிலான வரிக்கணிப்பு ஆண்டுகளுக்கு அரசுக்கு செலுத்த வேண்டிய வரி, அபராதம், வட்டி ஆகியவற்றின் நிலுவையை பெற வணிகர்களுக்கு வாய்ப்பு வழங்கும் சமாதான் திட்டம் சட்டப்பேரவையில் கடந்த 2021-ல் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்கு செயல்வடிவம் கொடுக்கும், சட்ட முன்வடிவை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று அறிமுகம் செய்தார்.

இதுதவிர, ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம் மற்றும் நிதிநிறுவனங்களின் மேல் முறையீடுகளை விசாரிக்கும் அதிகாரத்தை கீழமை அலுவலர்களுக்கு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிப்பதற்கான சட்ட முன்வடிவுகளையும் அமைச்சர் பி.மூர்த்தி தாக்கல் செய்தார்.

இதில், சமாதான் திட்டம், ஜிஎஸ்டி சட்டத்திருத்தம், சீட்டு நிதி சட்டத்திருத்தம் ஆகியவற்றுக்கான சட்ட முன்வடிவுகளை நேற்றே ஆய்வு செய்து நிறைவேற்றுவதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் முன்மொழிந்தார். இதையடுத்து, மூன்று சட்டத்திருத்தங்களும் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x