Published : 05 Jul 2014 10:00 AM
Last Updated : 05 Jul 2014 10:00 AM

கட்டிட இடிபாட்டால் சேதமடைந்த வீட்டு உரிமையாளர்களுக்கு ஆய்வுக்குப்பின் உதவி: காஞ்சிபுரம் ஆட்சியர்

சென்னை மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த 11 மாடி கட்டிடத்துக்கு அருகில் இருந்த சில வீடுகளும் சேதமடைந்தன. அந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் உடனடியாக செய்துதரப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

11 மாடி கட்டிடம் இடிந்த இடம் தற்போது வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்காக தமிழக அரசு ஒரு நபர் விசாரணை கமிஷனை நியமித்துள்ளது. அந்த அறிக்கையின்படியே மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் மவுலிவாக்கத்தில் கடந்த 7 நாட்களாக நடந்துவந்த மீட்பு பணிகள் யாவும் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைந்தன.

இந்த சம்பவத்தில் 61 பேர் உயிரிழந்துள்ளனர். 27 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் தற்போது மெல்ல மெல்ல உடல் நிலை தேறி வருகிறார்கள். மரணமடைந்த 61 பேரில் 55 பேரின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்னும் அடையாளம் தெரியாத 6 பேரின் உடல்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் உள்ளன. விரைவில் அவர்களது உடல்களும் சம்பந்தப்பட்டோரிடம் ஒப்படைக்கப்படும்.

மேலும் இந்த 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தபோது அருகிலிருந்த 3 வீடுகளும் இடிபாட்டை சந்தித்துள்ளன. அந்த வீடுகளில் வசித்து வருபவர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு இடங்களில் வசிக்க வேண்டி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அந்த வீடுகளின் உரிமையாளர்கள் தங்களுக்கு நிவாரணம் வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட பின்னர் அதன்படி முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x