Published : 10 Oct 2023 06:33 PM
Last Updated : 10 Oct 2023 06:33 PM
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், கோடநாடு விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி தனபால் பேச தடை விதிக்கக் கோரி முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற முறையில் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் தனபால், இந்த வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பொய்யான தகவல்களை பொது வெளியில் கூறி வருகிறார்.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலின் பேரில் தனபால் இதுபோல பேட்டியளித்து வருகிறார். அவர் ஏற்கெனவே இந்த வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்டவர். மேலும், தான் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஜாமீன் பெற்றுள்ளார். எனவே, இந்த வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கின் ஆவணங்களை மாஸ்டர் நீதிமன்றத்தில் பதிவு செய்வதற்காக விசாரணையை நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிரந்தர தடையாக மாற்றியமைத்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT