Published : 10 Oct 2023 05:33 PM
Last Updated : 10 Oct 2023 05:33 PM
சென்னை: மகளிர் உரிமைத் தொகை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின்போது, அதிமுக எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். முன்னதாக, இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை குறித்த முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்தனர்.
தமிழக சட்டப்பேரவையில், மகளிர் உரிமைத் தொகை கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, பல்வேறு உறுப்பினர்கள் பேசினர். அப்போது அதிமுக எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார், "குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, தமிழகத்தில் செயலாக்கத்துக்கு வந்திருக்கிறது. தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெண்கள் பலர் காத்திருக்கின்றனர். குடும்பத் தலைவிகளை தகுதியுள்ள குடும்பத் தலைவிகளாக தேர்ந்தெடுக்கிற அந்த தரவை ஒரு செய்திக் குறிப்பாக நான் அறிகிறேன்.
மகளிர் உரிமைத் தொகைக்காக 2 கோடியே 20 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டதாகவும், அதில் 1 கோடி மனுக்கள் தகுதியுடையதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், 59 லட்சம் மனுக்கள் அரசால் தகுதி இல்லை என தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அறிகிறேன். இதற்காக அரசு பல்வேறு வரம்புகளை அரசு வகுத்துள்ளது. இதை எந்த தகுதியின் அடிப்படையில் வகுத்தார்கள் என்று தெரியாது. ஆனால், முதல்வர் இத்திட்டத்தை அறிவித்தபோது சாமானிய மக்கள், ஏழை மக்கள் இவர்கள் அனைவருக்குமே வழங்குவதாக கூறியிருந்தார். ஆனால், நடைமுறையில் வசதி படைத்த குடும்பத் தலைவிகள் இந்த உரிமைத் தொகையைப் பெற்றிருப்பதாகவும் ஏழை எளிய சாமானிய மக்கள் விடுப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது" என்றார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, "பொத்தாம் பொதுவாக அதை ஒரு குற்றச்சாட்டாக சொல்ல வேண்டியது இல்லை. மகளிர் உரிமைத் தொகை 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். என்னைவிட வசதியானவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று எந்த ஓர் ஊடகம், பத்திரிகையில் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் சொல்லவில்லை. இந்தியாவில் அல்ல, உலகத்திலேயே 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேரை தேர்வு செய்து எந்த ஓர் ஊடகம், பத்திரிகையிலும் குற்றம்சாட்டாதபடி, வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிற திட்டம் குறித்து பொத்தாம் பொதுவாக குற்றம்சாட்ட வேண்டாம்" என்றார்.
அப்போது பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், "மகளிர் உரிமைத் தொகை குறித்து இதுதொடர்பாக பலமுறை பேசியிருக்கிறேன். விளக்கமாக கூறி இருக்கிறேன். ஒரு கோடி பேருக்கு குறையாமல் கொடுப்போம் என்றுதான் ஆரம்பத்தில் கூறினேன். இப்போது ஒரு கோடியே 6 லட்சத்தையும் தாண்டிவிட்டது. இன்னும் சொல்கிறேன். மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்ற அறிவிப்பை அரசின் சார்பில் வெளியிட்டுள்ளோம்.
தற்போது மேல்முறையீடும் செய்து வருகின்றனர். 9 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கையைத் தாண்டினாலும், அதையும் அரசு பரிசீலிக்கும். மேல்முறையீடு செய்யும் உண்மையான மனுதாரர்களுக்கு நிச்சயம் கொடுக்கப்படும். யாராவது, நியாயமாக எனக்கு வரவேண்டும் ஆனால், உரிமைத் தொகை கிடைக்கப்பெறவில்லை என்று சொல்லி உங்களிடம் வந்தால், அந்த மனுவையும் கொடுங்கள். அதையும் நாங்கள் அதிமுக வேறு கட்சி என்றெல்லாம் நாங்கள் பார்க்கமாட்டோம். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், நியாயமானவர்களுக்கு, தகுதியானவர்களுக்கு உறுதியாக வழங்கப்படும், என்றார்.
அப்போது ஆர்.பி.உதயகுமார், "பொங்கல் பரிசுத் திட்டம் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தபோது, 2 கோடியே 18 லட்சம் குடும்பங்களுக்கும், அதாவது குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்குமே வழங்கப்பட்டது" என்றார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஸ்டாலின், "அவர் கூறுவது ஆண்டுக்கு ஒருமுறை பொங்கல். இது மாதமாதம். அதனால்தான் தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் கொடுப்பது என்று முடிவெடுத்திருக்கிறோம். எனவே, அதையும் இதையும் ஒப்பிட்டுப் பேச வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல், மகளிர் உரிமைத் தொகை வழங்க காலதாமதம் ஆனதை குறிப்பிட்டு பேசினீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, நிதி நிலைமை சரியாக இருந்தால், அடுத்த நிமிடமே கொடுத்திருப்போம். நிநி நிலைமை அவ்வளவு மோசமாக இருந்தது. அதுவும் உங்களுக்குத் தெரியும். அதன்பிறகு, இத்திட்டத்துக்கு தகுதியான பயனாளிகளின் தரவுகளை சேகரித்தோம். அதற்கு காலதாமதம் ஆனது. இத்தனைப் பணிளை செய்து செப்டம்பர் மாதம் சொன்ன தேதியில் மகளிர் உரிமைத் தொகை கொடுத்திருக்கிறோம். இதுதான் உண்மை என்றார்.
அப்போது ஆர்.பி.உதயகுமார், “மேல்முறையீடு குறித்து முதல்வர் கூறியிருக்கிறார். நிபந்தனைகளின் அடிப்படையில், ஏற்கெனவே, அரசு 60 லட்சத்துக்கும், அதிகமான மனுக்களை நிபந்தனைகளின் அடிப்படையில் தள்ளுபடி செய்திருக்கிறது" என்றார்.
அப்போது பேசிய முதல்வர், “விதிமுறைகளுக்கு உட்பட்ட எந்த மனுக்களையும் நாங்கள் தள்ளுபடி செய்யவில்லை.அப்படி ஏதாவது இருந்தால் கூறுங்கள். ஆதாரங்களுடன் கொடுங்கள். உடனடியாக கவனிக்கப்படும். என்னிடம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. என்னிடம் கொடுப்பதில் அரசியல் பார்க்கிறீர்கள் என்றால், மாவட்ட ஆட்சியர்களிடத்தில் கொடுத்தால், அவர்களே அதை சரிசெய்வார்கள்" என்று வாதம் நடந்தது.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று (அக்.10) காலை தொடங்கியது. கேள்வி நேரத்தில், உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். இதனைத் தொடர்ந்து 110 விதியின் கீழ் "சமாதான திட்டத்தின் கீழ் வரி மதிப்பீட்டு ஆண்டில், ரூ. 50,000-க்கும் குறைவாக வரி, வட்டி, அபராதத் தொகை செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு இந்நிலுவைத் தொகையானது முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். அரசின் இந்த முடிவால், 1 லட்சத்து 40 ஆயிரத்து 398 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 95 ஆயிரத்து 602 சிறு வணிகர்கள் பயனடைவார்கள்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.இதனைத் தொடர்ந்து, தமிழக சிறைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இஸ்லாமியி சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT