Last Updated : 10 Oct, 2023 04:52 PM

 

Published : 10 Oct 2023 04:52 PM
Last Updated : 10 Oct 2023 04:52 PM

குரூப் 4 விடைத்தாள் நகலை உடனடியாக வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு 

மதுரை: குரூப் 4 தேர்வுக்கான விடைத்தாள் நகலை உடனடியாக வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கண்மணி, கீதா ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ''தமிழகத்தில் 7301 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு 2022 மார்ச் மாதம் வெளியானது. அந்தாண்டு ஜூலை 24-ல் எழுத்துத்தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கு 22 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் 18 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். பின்னர் குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 ஆக அதிகரிக்கப்பட்டது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்றோர் பட்டியலில் எங்கள் பெயர் இல்லை. தேர்வில் எங்களுக்கு 255 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் நாங்கள் தேர்வு செய்யப்படவில்லை. குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. குரூப் 4 தேர்வில் மோசடி நடைபெற்றுள்ளது. எனவே எங்களின் வினாத்தாளை ஓஎம்ஆர் சீட் வழங்க உத்தரவிட வேண்டும். எங்களுக்காக 2 பணியிடங்களை காலியாக வைக்க உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஆர்.விஜயகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, ''குரூப் 4 தேர்வுக்கான விடைத்தாள் நகலை உடனடியாக வெளியிட வேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x