Published : 10 Oct 2023 05:12 PM
Last Updated : 10 Oct 2023 05:12 PM
சிவகங்கை: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஒரு வாரமாக மூடிக் கிடப்பதால், பயிர்க் கடன், உரம் வழங்கும் பணி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர்க் கடன், கால்நடை வளர்ப்பு கடன், நகைக்கடன், சிறுவணிகக் கடன், மாற்றுத் திறனாளி கடன், மகளிர் குழு கடன் உள்ளிட்ட கடன் வழங்கப்படுகிறது. சில சமயங்களில் அரசு கடன்களை தள்ளுபடி செய்கிறது. ஆனால், அதற்குரிய தொகையை முறையாக கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குவதில்லை.
இதனால் பல சங்கங்கள் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி, வைப்புத் தொகைதாரர்களுக்கு முதிர்வு தொகையைக் கூட வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. மேலும், ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஊதியம், கடை வாடகை, மின் கட்டணம் போன்றவை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. ஆனால், இதற்கான மானியத் தொகையை அரசு ஓரிரு ஆண்டுகளுக்கு பின்னரே சங்கங்களுக்கு வழங்குகிறது.
இந்நிலையில், டிராக்டர், நெற்கதிர் அறுக்கும் இயந்திரம், கரும்பு வெட்டும் இயந்திரம், பறக்கும் மருந்து தெளிப்பான் (ட்ரோன்), லாரிகள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவற்றை வாங்க வேண்டும். கிட்டங்கிகள் கட்ட வேண்டுமென கூட்டுறவு சங்கங் களை அதிகாரிகள் வற்புறுத்தி வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் அக்.3-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 125 கூட்டுறவு சங்கங்களில் 109 சங்கங்கள் மூடிக் கிடக்கின்றன. இதனால் பயிர் கடன், நகைக் கடன் மற்றும் உரம் விநியோகப் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
விவசாயப் பணிகள் தொடங்கிய நிலையில், கூட்டுறவு சங்கங்கள் மூடிக்கிடப்பதால், விவசாயிகள் தனியார் உரக் கடைகளை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது: கடந்த காலங்களில் ஐசிடிபி, ஆர்ஐடிஎப், அக்ரோ சர்வீஸ், அக்ரி கிளினிக் ஆகிய திட்டங்கள் மூலம் டிராக்டர் உள்ளிட்ட விவசாய உபகரணங்களை சங்கங்கள் வாங்கின. கிடங்குகளை கட்டின.
தற்போது அவை பயன்பாட்டில் இல்லாததால், சங்கங்களுக்கு நஷ்டம்தான் ஏற்பட்டது. அதேபோல், தற்போதும் இயந்திரங்கள் வாங்கவும், கிடங்குகள் கட்டவும் அரசாணையோ, பதிவாளர் சுற்றறிக்கையோ இல்லாமல் வாய்மொழி மூலம் வற்புறுத்துகின்றனர். இதற்கு குறைந்தது ரூ.2 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை செலவழிக்க வேண்டும். இதன்மூலம் சங்கங்களுக்கு நஷ்டம்தான் ஏற்படும். இதை கண்டித்துதான் போராடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT