Published : 10 Oct 2023 03:56 PM
Last Updated : 10 Oct 2023 03:56 PM
கடலூர்: கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த சுந்தரி ராஜாவும், துணை மேயராக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தாமரைச்செல்வனும் உள்ளனர்.
இந்த மாநகராட்சியில் திமுக கவுன்சிலர்கள் 30 பேர் (திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற இரு தமிழக வாழ்வுரிமை கட்சி கவுன்சிலர்கள் உட்பட), அதிமுக கவுன்சிலர்கள் 6 பேர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர்கள் 3 பேர் உள்ளனர். மேலும், சுயேச்சை 3 பேர், பாமக, பாஜக,காங்கிரஸ் கவுன்சிலர்கள் முறையே ஒருவர் உள்ளனர். ஆளும் திமுக தரப்பை பொறுத்தவரையில் இந்த மாநகராட்சியில் கூட்டணிக் கட்சி கவுன்சிலர்களுடன் இதுநாள் வரையில் இணக்கமாகவே சென்று வந்துள்ளனர்.
இந்தச் சூழலில், “கடலூர் மாநகராட்சியில் வார்டு நிர்வாகத்தில் தேவையில்லாமல் துணைமேயர் தாமரைச்செல்வன் தலையிடுகிறார். வருகிற மாநகராட்சி கூட்டத்தில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும்” என்று ஆவேசமாகக் கூறி, திமுக கவுன்சிலர்கள் சில தினங்களுக்கு முன் மேயர் சுந்தரி ராஜாவிடம் மனு ஒன்றை அளித்து, முறையிட்டனர்.
திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் ஆதரவுடன் போட்டியின்றி ஒரு மனதாக துணை மேயர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர் தாமரைச்செல்வன் கூட்டணிக் கட்சி என்ற முறையில், திமுக சார்ந்த ஒவ்வொரு நிகழ்விலும் ஆர்வத்துடன் பங்கேற்று வந்தவர். இவர் மீது, ‘திமுக கவுன்சிலர்கள் ஏன் திடீர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்?’ என்ற கேள்வி எழுந்தது. வார இதழ் ஒன்றில், ‘கடலூர் மாநகராட்சி பணிகளில் கமிஷன் இல்லாமல் எந்தப் பணிகளும் நடைபெறுவதில்லை” என்று துணைமேயர் தாமரைச்செல்வன் அளித்த பேட்டி ஒன்று வர, அது மாநகர திமுகவினரை கொதித்தெழச் செய்திருக்கிறது. அதுவே இந்த எதிர்ப்புக்கு காரணம் என்று கடலூர் மாநகர அளவிலான அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதற்கிடையே, கடலூர் மாவட்ட திமுகவின் முக்கியஸ்தரான கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை துணைமேயர் தாமரைச்செல்வன் தனியாக சந்தித்து, தான் அதுபோல் பேட்டி தரவில்லை. அவர்களாக அப்படி போட்டுக் கொண்டனர் என்று தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார். இதன் பின்னர், கடலூர் சுற்றுலா மாளிகையில் மேயர் மற்றும் திமுக கவுன்சிலர்களை அழைத்து நீண்ட நேரம் பேசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அவர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், கூட்டணிக் கட்சியினரை அரவணைத்துச் செல்வது அவசியம் என்று கூறியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் காட்சி வேறு விதமாக மாறியது. மாநகராட்சி பணிகளை கவனிக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் துணை மேயர் தாமரைச் செல்வனுக்கு கார் ஒன்று வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு அவர் அழைக்கப்பட, அதை அவர் மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார். உடனிருந்து மேயர் சுந்தரி ராஜா அவருக்கு வாழ்த்து தெரிவிக்க, எல்லாம் சுபமாய் முடிந்தது.
மேயர் வந்து காரை வழங்கி, வாழ்த்தியது மட்டுமில்லாமல் அவசரகதியாக ஆட்சியர் அருண் தம்புராஜ், கூடுதல் ஆட்சியர் மதுபாலனும் அங்கு சென்று துணை மேயர் தாமரைச் செல்வனுக்கு வழங்கும் புதிய காரைப் பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் போதாது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமும் அங்கு வந்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT