Last Updated : 10 Oct, 2023 01:08 PM

 

Published : 10 Oct 2023 01:08 PM
Last Updated : 10 Oct 2023 01:08 PM

வேலூரில் நிலுவை சம்பளத்துக்காக காத்திருக்கும் பம்ப் ஆபரேட்டர்கள்

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப் படையில் பணியாற்றி வரும் பம்ப் ஆபரேட்டர் களுக்கு 4 மாத சம்பள பணம் வழங்காததால் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

வேலூர் மாநகராட்சி 60 வார்டுகளை உள்ளடக்கியது. 4 மண்டலங்களில் 225 பம்ப்ஆபரேட்டர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் 6,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 4 மாதங்களாக 225 பம்ப் ஆபரேட்டர்களுக்கு மாத சம்பளம் வழங்காததால், அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. மாத சம்பளம் முறையாக வழங்காததால் கை செலவுக்கு கூட பணம் இல்லாமல் பம்ப் ஆபரேட்டர்கள் பரிதாப நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

இது குறித்து பம்ப் ஆபரேட்டர்கள், ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாநகராட்சியில் ஒப்பந்த அடிப் படையில் பம்ப் ஆபரேட்டர்களாக பணியாற்றி வருகிறோம். 4 மண்டலங்களில் 225 பேர் பணிபுரிந்து வருகிறோம். தினசரி அதிகாலை 4 மணிக்கு பணிக்கு வருகிறோம். காலை 10 மணி வரை பல்வேறு பகுதிகளுக்கு சென்று தண்ணீர் விநியோகிக்கும் பணிகளில் ஈடுபடுகிறோம்.

அதன்பிறகு, மாநகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த தவறிய குடிநீர் கட்டணங்களை வீடு தேடிச்சென்று வசூலிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம். மேலும், குடிநீர் தொட்டியை சுத்தம் செய்வது, எங்கேயாவது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டால், அதை சரி செய்யும் பணியில் ஈடுபடுவது உள்ளிட்ட பணிகளை சளிக்காமல் செய்து வருகிறோம். ஆனால், மாதந்தோறும் வழங்கப்படும் சம்பளம் முறையாக வழங்காதது எங்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.

மாதம் தோறும் 15-ம் தேதி முதல் 20-ம் தேதிக்குள்ளாக எங்களுக்கு மாத சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. அதுவும், கடந்த 4 மாதங்களாக வழங்கப்படவில்லை. இதனால், பல்வேறு துயரங்களை அனுபவித்து வருகிறோம். கை செலவுக்கு கூட பணம் இல்லாமல் வெளியிடங்களில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு, கடன் சுமை அதிகரித்து வட்டி கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வருங்கால வைப்பு நிதியை முறையாக எங்கள் கணக்கில் வரவு வைக்கப்படுவது இல்லை. பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு, மாதந்தோறும் 1-ம் தேதி சம்பளம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என பலரிடம் மனு அளித்தும் எந்தப் பயனும் இல்லை.

சமீபத்தில், வேலூர் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும் பணி நிரந்தரம் செய்யக்கோரி மனு அளித்து விட்டோம். மாநகராட்சி நிர்வாகமும் கண்டும், காணாமல் இருப்பது எங்களை வேதனைப்படுத்துவதாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க தற்போது நிலுவையில் உள்ள சம்பள பணத்தை உடனடி யாக வழங்க வேண்டும் என கடந்த வாரம் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தோம்.

ஒப்பந்ததாரரிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறுகின்றனர். அங்கு சென்று முறையிட்டால் டெண்டர் முடிந்து விட்டது. மீண்டும் டெண்டர் வைத்து அதன் பிறகு தான் சம்பளம் குறித்து முடிவு எடுக்கப் படும் என கூறுகின்றனர். இப்படி முரண்பட்ட கருத்துகளால் 225 பம்ப் ஆபரேட்டர்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேயர், துணை மேயரிடம் முறையிட ஆலோசித்து வருகிறோம். விரைவில், எங் களுக்கான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பணி புரிந்து வருகிறோம். மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நிலுவையில் உள்ள சம்பள பணத்தை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘இது தொடர்பாக ஆலோசிக் கப்பட்டு வருகிறது. டெண்டர் விடப்பட்டு விரைவில் பம்ப் ஆபரேட்டர்களுக்கான நிலுவை சம்பளம் வழங்கப்படும். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x