Last Updated : 10 Oct, 2023 02:37 PM

1  

Published : 10 Oct 2023 02:37 PM
Last Updated : 10 Oct 2023 02:37 PM

கல்பாக்கம் அருகே குடிநீர் வசதி, மின் இணைப்பு இல்லாமல் இருண்டு கிடக்கும் இருளர் குடியிருப்பு

வாயலூர் ஊராட்சி இருளர் குடியிருப்பு பகுதியில் கட்டுமான பணிகள் நிறைவடைந்து, வண்ணம் பூசி தயார் நிலையில் உள்ள குடியிருப்புகள்.

கல்பாக்கம்: கல்பாக்கம் அடுத்த வாயலூர் ஊராட்சியின் இருளர் குடியிருப்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட 17 வீடுகளுக்கு இன்னும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாததால் வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழைக்காலம் தொடங்கியுள்ளதால் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு குடிசைகளில் வசிக்கும் இருளர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட இருளர் குடியிருப்பு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டி,குடிசை வீடுகள் அமைத்து வசித்துவரும் இருளர்மக்கள், மழைக்காலங்களில் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கும் நிலை உள்ளது.

இதனால், இருளர் மக்களுக்கு குடியிருப்புகள் அமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் இருளர் பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன்பேரில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு 30-க்கும் மேற்பட்ட கான்கிரீட் வீடுகள் அமைத்து தரப்பட்டன. எனினும், வீடுகள் கிடைக்கப்பெறாத இருளர் மக்கள் தொடர்ந்து குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், பழங்குடியினர் நலத்திட்டத்தில் கடந்த 2019-20-ம் ஆண்டில் தலா ரூ.3 லட்சம் செலவில் 17 வீடுகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதன்மூலம் அப்பகுதியில் வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்றன. இந்த வீடுகளின் கட்டுமான பணிகளுக்கு 70 சதவிதம் பயனாளிகளே தொழிலாளர்களாக பணியாற்றியதாக தெரிகிறது. எனினும், பணிகள் முழுமையாக நிறைவடையாமல் இருந்தது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இருளர் மக்களுக்கு கட்டப்பட்டிருந்த வீடுகளை ஆய்வு செய்தார். பின்னர், குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க பழங்குடியினர் நலத்துறைக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன. தற்போது, இந்த குடியிருப்புகளின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. எனினும், முன்றுமாதங்கள் கடந்தும் புதிய குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது.

இதனால், குடியிருப்புகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, மழைக்காலம் தொடங்கியுள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் இருளர் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அதனால், புதிய குடியிருப்புகளுக்கு விரைவாக மின் இணைப்பு வழங்கி பயனாளிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருளர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சங்கர்

இதுகுறித்து, இருளர் பகுதியை சேர்ந்த சங்கர் கூறியதாவது: இருளர் குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்த அதிகாரிகளிடம் வீடுகள் அமைத்து தருமாறு கோரிக்கை மனு வழங்கினோம். இதன்பேரில், கான்கீரிட் வீடுகள் அமைத்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், கரையையொட்டி பாதுகாப்பான பகுதியில் நிலம் தேர்வு செய்யப்பட்டு குடியிருப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றன.

எங்களிடம் முதலீடு இல்லை என்பதால், கட்டுமான பணிகளை பங்களிப்பாக மேற்கொண்டோம். தற்போது, சமையல் அறை, படுக்கை அறையுடன் கூடிய குடியிருப்புகளின் கட்டுமான பணிகள்நிறைவடைந்து, வண்ணம் பூசி தயார் நிலையில் உள்ளது. ஆனால், மின் இணைப்பு வழங்கப்படாததால் எங்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்படாமல் உள்ளது என்றார்.

கிங் உசேன்

இதுகுறித்து, சமூக ஆர்வலர் கிங் உசேன் கூறியதாவது: இருளர் மக்கள் கல்வி அறிவு இல்லாததால் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் யாரிடம் தெரிவிப்பது என தெரியாமல் உள்ளனர். மேற்கண்ட பகுதியில் குடியிருப்புகள் அமைக்கும்போது, இருளர் மக்களை அஸ்திவார பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதனால், தங்களின் உடல் உழைப்பை முதலீடாக வழங்கினர்.

ஆனால், பணிகளின் நிலை குறித்து இங்கு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளவில்லை. தற்போது, கட்டிடங்கள் தயார் நிலையில் இருந்தும், மின் இணைப்பு இல்லாததால் அதனருகே குடிசை அமைத்து இருளர் மக்கள் தங்கும் நிலை உள்ளது. மேலும், புதிய குடியிருப்புகளின் நடுவே அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.3.4 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையும் பாதி மட்டுமே அமைத்து குறையாக நிறுத்தப்பட்டுள்ளது.

குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை. மேலும், இருளர் குடியிருப்பு பகுதியிலிருந்து காரைத்திட்டு பகுதிக்கு செல்லும் 350 மீட்டர் சாலையும் அமைக்கப்படாமல் உள்ளதால், மழையின்போது சகதிகளின் நடுவே இருளர் மக்கள் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால், மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி இருளர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் வெற்றிகுமார் கூறியதாவது: வாயலூர் இருளர் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகள், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்துபோது மேற்கொள்ளப்பட்ட திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக கருதுகிறோம்.

எனினும், குடியிருப்புகள் தயார் நிலையில் இருந்தும் மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளதாக கூறியுள்ளனர். உரிய விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொண்டு, மின் இணைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x