Published : 10 Oct 2023 12:11 PM
Last Updated : 10 Oct 2023 12:11 PM

95 ஆயிரம் சிறு வணிகர்களின் வரி நிலுவைத் தொகை தள்ளுபடி: 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் 110விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டு உரையாற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: "சமாதான திட்டத்தின கீழ் வரி மதிப்பீட்டு ஆண்டில், ரூ. 50,000-க்கும் குறைவாக வரி, வட்டி, அபராதத் தொகை செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு இந்நிலுவைத் தொகையானது முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். அரசின் இந்த முடிவால், 1 லட்சத்து 40 ஆயிரத்து 398 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 95 ஆயிரத்து 602 சிறு வணிகர்கள் பயனடைவார்கள்" என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று (அக்.10) காலை தொடங்கியது. கேள்வி நேரத்தில், உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். இதனைத் தொடர்ந்து 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வணிகர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான வணிக வரி நிலுவைத் தொகை குறித்த புதிய சமாதான திட்டத்தை அறிவித்து, பேசியதாவது: "தமிழகத்தில் உள்ள வணிக பெருமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கும், வணிக வரித்துறைக்கும் இடையே உள்ள வரி நிலுவை, மற்றும் மேல்முறையீடுகள் குறித்த பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாகவும், சிறு வணிகர்களுக்கான நலன் காத்திடுவதற்கான மேலும் ஒரு முன்னோடி நடவடிக்கையாகவும் இந்த அரசு செயல்படுத்தப்படவுள்ள புதிய வரி நிலுவைத் தொகை சமாதான திட்டம் பற்றிய அறிவிப்பை 110-விதியின் கீழ் வெளியிடுகிறேன்.

தமிழக அரசுக்கு, வணிகர்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை தொடர்பாக 2 லட்சத்து 11 ஆயிரத்து 607 கேட்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் சம்பந்தப்பட்ட வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை, 1 லட்சத்து 42 ஆயிரத்து 569. இவற்றில் நிலுவையாக உள்ள தொகை 25 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மிக அதிக எண்ணிக்கையில், வழக்குகள் நிலுவையில் உள்ளதால், வணிக வரித்துறையின் பணிச்சுமை அதிகரிப்பதோடு, நமது வணிகர்களும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழக அரசுக்கு வரவேண்டிய வருவாயும் பெருமளவில் நிலுவையாக உள்ளது. இவற்றில் பெரும்பான்மையான வழக்குகள், தமிழ்நாடு வணிக வரிச் சட்டம் மற்றும் தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச்சட்டம் ஆகியவற்றின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகள்.

மேற்கூறிய இரு முக்கிய சட்டங்கள், மற்றும் பல இதர சட்டங்களையும் உள்ளடக்கி கடந்த 1.7.2017 முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இருந்தாலும், ஏற்கெனவே வழக்கத்தில் இருந்த மேற்கூறிய வணிக வரிச்சட்டங்களின் கீழ் அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய வரி அதன் மீதான வட்டி மற்றும் அபராதம் ஆகியன இன்னமும் பல வணிகர்களின் பெயர்களில் இருந்து வருகின்றன.

இந்த நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்துவதில், சலுகைகள் வழங்கப்பட்டு இந்த பிரச்சினைக்கு முடிவு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வணிகர்கள் நீண்ட நாட்களாக முன்வைத்து வருகிறார்கள். இந்த கோரிக்கைகளை கவனமுடன் பரிசீலித்து, இத்தகைய பழைய நிலுவைத் தொகைகளை வசூலிப்பதில், ஒரு சமாதான திட்டத்தை அறிவித்து செயல்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டுகளில், இந்த நிலுவைத் தொகைகள் குறித்து பல சமாதான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருந்தாலும், புதியதோர் அணுகுமுறையோடும், கூடுதல் சலுகையோடும், இந்த திட்டம் இப்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின கீழ் வரி மதிப்பீட்டு ஆண்டில், ரூ. 50,000-க்கும் குறைவாக வரி, வட்டி, அபராதத் தொகை செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு இந்நிலுவைத் தொகையானது முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்.

ஒவ்வொரு மதிப்பீட்டு ஆண்டிலும், ரூ.50,000-க்குட்பட்ட நிலுவை இனங்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும். தமிழகத்தின் வரலாற்றில் சிறு வணிகர்களுக்கு இவ்வாறு முழுமையாக வரிநிலுவை தள்ளுபடி செய்யப்படுவது இதுதான் முதல்முறை. அரசின் இந்த முடிவால், 1 லட்சத்து 40 ஆயிரத்து 398 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 95 ஆயிரத்து 602 சிறு வணிகர்கள் தமது நிலுவைத் தொகையை முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டு பயனடைவார்கள்.

இப்படி, நிலுவைத் தொகை தள்ளுபடி செய்யப்பட்ட வணிகர்கள் தவிர, இதர வணிகர்கள் மற்றும் நிறுவனங்கள் அனைவரும் ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரை வரி நிலுவையில் உள்ளவர்கள், ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வரி நிலுவையில் உள்ளவர்கள், ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரை வரி நிலுவையில் உள்ளவர்கள், ரூ.10 கோடிக்கும் மேலாக நிலுவையில் உள்ளவர்கள், என நான்கு வரம்புகளின் கீழ் கொண்டு வரப்படுவர்.

மேற்கூறிய நான்கு வரம்பில் முதல் வரம்பில் உள்ளவர்கள், மொத்த நிலுவைத் தொகையில், 20 விழுக்காட்டைக் கட்டி நிலுவை வழக்குகளில் இருந்து வெளிவரலாம். அல்லது நிலுவையில் உள்ள வணிக வரி, வட்டி மற்றும் அபராதத் தொகையில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு தொகையைக் கட்டி நிலுவை வழக்குகளில் இருந்து வெளிவரலாம்.

இதர மூன்று வரம்புகளில் உள்ள வணிகர்களும், நிலுவையில் உள்ள வணிக வரி வட்டி மற்றும் அபராதத் தொகையில் குறிப்பிட்ட விழுக்காட்டைக் கட்டினால் நிலுவை வழக்குகளில் இருந்து வெளிவரும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவர்களில் வரி விலக்கை ஏற்றுக்கொண்டிருப்பவர்களும், வரி விதிப்பை ஏற்றுக்கொள்ளாமல் மேல்முறையீடு செய்திருப்பவர்களுக்கும் என தனித்தனியாக நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மேலும் ஒரு முக்கிய சலுகையாக, நிலுவைத் தொகையினை வணிகர்கள் கட்ட முன்வரும் நாள் வரை, அவர்களது கணக்கில் ஏற்றப்பட ஏதுவான திரண்ட வட்டித் தொகையும் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும்.

தமிழக வணிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த திட்டம் வரும் 16.10.2023 முதல் நடைமுறைக்கு வரும். நான்கு மாத காலம் நடைமுறையில் இருக்கும். அதாவது, 2024ம் ஆண்டு பிப்.15ம் தேதி வரை, இந்த சமாதான திட்டம் நடைமுறையில் இருக்கும். அரசின் இந்த முன்னோடி முயற்சியை முழுமையாக வணிகர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளுக்குத் தீர்வு காண்பதோடு, தமிழக அரசுக்கு சேர வேண்டிய வருவாயும் அதிகரித்து வணிகர்கள் மென்மேலும் தொழில் வளர்த்து வளம்பெற வேண்டும்" என்று முதல்வர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x