Published : 10 Oct 2023 05:03 AM
Last Updated : 10 Oct 2023 05:03 AM

நாளை வரை சட்டப்பேரவை கூட்டம்: பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: நாளை புதன்கிழமை வரை 3 நாட்கள் பேரவைக்கூட்டம் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. நேற்றைய பேரவை நிகழ்ச்சிகள் முடிவுற்ற நிலையில், பிற்பகலில் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்ட முடிவில், பேரவை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறியதாவது:

2023-24-ம் ஆண்டுக்கான துணை மானிய கோரிக்கையை நிதியமைச்சர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இதன் மீதான விவாதம் நாளை (இன்று) நடைபெறும்.

இருக்கை விவகாரம்: தொடர்ந்து, மறுநாள் புதன்கிழமை இந்த விவாதத்துக்கு நிதியமைச்சர் பதிலளிப்பதுடன், அன்று ஏதேனும் சட்ட முன்வடிவுகள் கொண்டுவரப்படுமானால், அன்றே விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். மொத்தமாக 3 நாட்கள் சட்டப்பேரவைக்கூட்டம் நடைபெறும்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அது அவர்கள் உரிமை. சட்டப்பேரவையில் இருக்கைகள் ஒதுக்குவது பேரவைத் தலைவரின் முழு உரிமை.

ஆஸ்திரேலிய நாடாளுமன்ற சபாநாயகர், எம்.பி.க்கள் வந்து தமிழக சட்டப்பேரவை மாடத்தில் இருந்து பார்த்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது மகிழ்ச்சியை தருகிறது.

இவ்வாறு பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x