Published : 10 Oct 2023 05:40 AM
Last Updated : 10 Oct 2023 05:40 AM

சட்டப்பேரவையில் காவிரி விவகார தீர்மானம்: முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் இடையே காரசார விவாதம்

சட்டப்பேரவை கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. உடன் அதிமுக எம்எல்ஏக்கள்.

சென்னை: காவிரி விவகார தீர்மானம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. காவிரி விவகாரம் தொடர்பான தீர்மானத்தின் மீது விவாதம்:

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தி இருக்க வேண்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழகத்துக்கு தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என்றுதான் தீர்மானத்தில் உள்ளது.

எதிர்கட்சித் தலைவர்: பெங்களூருவில் நடந்த ‘இண்டியா’ கூட்டணியின் கூட்டத்தில் கலந்துக் கொண்ட முதல்வர், அப்போதே கர்நாடக முதல்வரிடம் நட்பின் அடிப்படையில் காவிரியில் தண்ணீர் கேட்டு இருக்க வேண்டும்.

பேரவைத் தலைவர் அப்பாவு: நீங்கள் பிரதமரை சந்தித்தபோது காவிரியில் தண்ணீர் தர கேட்டிருக்கலாமே.

எதிர்க்கட்சித் தலைவர்: நாங்கள் பிரதமரை சந்தித்தபோது எல்லாம் காவிரி பிரச்சினை குறித்து பேசியிருக்கிறோம்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: காவிரி பிரச்சினையில் நீதிமன்றம் சென்றிருக்கிறோம். அப்படி இருக்கும்போது கர்நாடக முதல்வருடன் இதுதொடர்பாக பேசினால், நீங்களே பேசி பிரச்சினையை முடித்துக் கொள்ளுங்கள் என்று நீதிமன்றம் சொல்லிவிடும். அப்படி பேசுவது நமது உரிமையை அடகு வைப்பதற்கு சமமாகும்.

எதிர்கட்சித் தலைவர்: அப்படிப்பட்ட கட்சியுடன் ஏன் கூட்டணியில் இருக்க வேண்டும்.

நீர்வளத்துறை அமைச்சர்: கூட்டணி வேறு. உரிமை வேறு. ‘இண்டியா’ என்பது எப்படியாவது பாஜகவை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என்பதற்காக உருவானது.

எதிர்க்கட்சித் தலைவர்: காவிரியில் நமது உரிமையை பெற அதிமுக எம்.பி.க்கள் 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கினார்கள்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி: பாஜகவை காப்பாற்ற வேண்டிய சூழலில் நாடாளுமன்றத்தை முடக்கினீர்கள்.

எதிர்க்கட்சித் தலைவர்: காவிரி விவகாரம் குறித்து ஏன் நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் பேசவில்லை?

முதல்வர்: எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு, நாங்கள் பேசவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சொல்கிறார். துணிச்சல் பற்றி அவர் எங்களுக்கு சொல்ல வேண்டாம்.

எதிர்க்கட்சித் தலைவர்: நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். மக்கள் பிரச்சினையை பற்றி பேசுகிறோம்.

முதல்வர்: தவறான கருத்தை பதிவு செய்யும்போது மறுப்பது எங்களது கடமை.

எதிர்க்கட்சித் தலைவர்: மத்திய அரசுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றுதான் சொல்கிறோம். குறுவை சாகுபடி பாதிப்புக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500 அறிவிக்கப்பட்டுள்ளது. இது போதாது. பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்க்கவில்லை. விவசாயிகளுக்கு தேவையான அளவு நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். குறுவை சாகுபடி பொய்த்துபோய் விட்டது. சம்பா, தாளடி சாகுபடிக்கு என்ன செய்யப்போகிறோம். இன்னும் 6 மாத காலத்துக்கு மேட்டூர் அணைக்கு நீர் வராது. இந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரித்தாலும், முழுமனதோடு இந்த அரசு செயல்பட்டால்தான் நீரை பெற முடியும். மத்தியில் ஆட்சி மாறி மாறி வந்தாலும், கர்நாடகத்தில் தேசிய கட்சிகள்தான் ஆளுகின்றன. எந்த ஆட்சி வந்தாலும் நீர் கிடைப்பது சிரமம். அதனால், நாம் அனைவரும் இணைந்து பணியாற்றி கர்நாடகத்தில் இருந்து நீரை பெற வேண்டும். அதற்கு அதிமுக எப்போதும் துணை நிற்கும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x