Published : 02 Dec 2017 10:13 AM
Last Updated : 02 Dec 2017 10:13 AM
விரைவு ரயில்களின் முன்பதிவு பெட்டிகளில் உரிய டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோரை பிடிக்க தெற்கு ரயில்வே தனிப்படை அமைத்துள்ளது. இந்த தனிப்படையினர் நடத்தும் சோதனையில் தினமும் சுமார் 500 பேர் பிடிபடுகிறார்கள்.
விரைவு ரயில்களில் முன்பதிவு செய்யப்படும் பெட்டிகளில், முன்பதிவில்லா டிக்கெட்களை வைத்திருப்போரும் பயணிப்பது சமீப காலமாக அதிகரித்துள்ளது. இதனால் முறையாக முன்பதிவு செய்யும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியில், முன்பதிவில்லா பயணச்சீட்டு வாங்கியவர்களும் பயணித்ததால் சிரமத்துக்கு ஆளான பயணி ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி நுகர்வோர் குறைதீர் ஆணையம், சிரமத்துக்கு ஆளான பயணிக்கு வடக்கு ரயில்வே ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
இந்த பிரச்சினையை தீர்க்க, ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்வோரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க 10 பேர் கொண்ட சிறப்புப் படையை தெற்கு ரயில்வே கடந்த வாரம் அமைத்துள்ளது.
இதுபற்றி சென்னை ரயில் கோட்ட முதுநிலை டிக்கெட் ஆய்வாளர் எல்.அசோக்குமார் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
ரயில் முன்பதிவு பெட்டிகளில் உரிய டிக்கெட் இல்லாதவர்கள் பயணம் செய்வதால் தாங்கள் அவதிப்படுவதாக முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். அதில் சிலர் பயணிகளின் செல்போன், லேப்டாப் போன்ற பொருட்களை திருடிச் செல்லும் நிலையும் ஏற் படுகிறது. இதற்கிடையே, சென்னை ரயில் கோட்ட மூத்த வணிக மேலாளர் ரவிச்சந்திரன் உத்தரவுப்படி, முன்பதிவு பெட்டிகளில் உரிய டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களைத் தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும், அவர்களை எவ்வாறு முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கு அனுப்ப வேண்டுமென தனிப்படையினருக்கு பயிற்சி அளித்துள்ளோம்.
இந்த தனிப் படையினர் ரயில்களில் பயணம் செய்து சோதனை மேற்கொள்வார்கள். இந்த சோதனையில் தினமும் 300 முதல் 500 பேர் பிடிக்கப்படுகிறார்கள்.
நல்ல வரவேற்பு
உரிய டிக்கெட் இல்லாதவர்களை ரயில் நிலையங்களில் இறக்கி விடுகிறோம். முன்பதிவு இல்லாத டிக்கெட் இருந்தால், அவர்களை சம்பந்தப்பட்ட பெட்டிகளுக்கு அனுப்பி விடுகிறோம். தற்போது, கோயம்புத்தூர் இன்டர்சிட்டி, கோரமண்டல், ஹவுரா மெயில், பிருந்தாவன், வெஸ்ட் கோஸ்ட் உள்ளிட்ட ரயில்களில் சோதனை நடத்தி வருகிறோம்.
இத்திட்டம் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற விரைவு ரயில்களில் இதை விரிவுப்படுத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT