Last Updated : 03 Dec, 2017 08:36 AM

 

Published : 03 Dec 2017 08:36 AM
Last Updated : 03 Dec 2017 08:36 AM

குமரியில் 700 குளங்களில் உடைப்பு: அணைகள் நிரம்புவதால் வெள்ள அபாய எச்சரிக்கை

‘ஒக்கி’ புயல் திசைமாறிச் சென்ற பிறகும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 4-வது நாளாக நேற்றும் கனமழை பெய்ததால் 700 குளங்களுக்கு மேல் உடைப்பு ஏற்பட்டுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு தண்ணீர் அதிகம் வருவதால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை கடந்த 30-ம் தேதி ஒக்கி புயல் தாக்கியதால் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. குடிநீர், மின் விநியோகம் தடைபட்டுள்ளது. செல்போன் கோபுரங்கள் சேதமடைந்ததால் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதிப்பிலிருந்து மீளமுடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.

4-வது நாளாக கனமழை

லட்சத்தீவை நோக்கி ‘ஒக்கி’ புயல் திசைமாறிச் சென்ற பின்னரும் குமரி மாவட்டத்தில் 4-வது நாளாக கன மழை தொடர்கிறது. நேற்று அதிகபட்சமாக முள்ளங்கினாவிளையில் 163 மிமீ. மழை பதிவானது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே, ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் உள்ள 700-க்கும் மேற்பட்ட குளங்களில் மடைகள் மற்றும் கரைப்பகுதிகள் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.

கன்னியாகுமரி அருகே உள்ள அச்சன்குளம், பூதப்பாண்டி தென்கரை குளம், அனந்தன்குளம், தத்தையார் குளம், மாணிக்கத்தேரி குளம். புத்தேரி நெடுங்குளம் ஆகிய குளங்களில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறி வயல்பகுதிகளுக்குள் புகுந்துள்ளது. உடைப்பை சரி செய்யும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஆறுகள், கால்வாய்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

மாவட்டம் முழுவதும் நேற்று 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன. நாகர்கோவிலில் இருந்து ஒழுகினசேரி செல்லும் பாலம் உட்பட பல இடங்களில் உள்ள ஆற்றுப்பாலங்களுக்கு மேல் தண்ணீர் ஓடுவதால், வாகனப் போக்குவரத்தில் சிக்கல் நீடித்தது.

நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் பெரும்பாலான பேருந்துகள், கன்னியாகுமரி வழியாக திருப்பி விடப்பட்டன. மீனவர்கள் நேற்று 3வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. ரப்பர் பால் வெட்டுதல், முந்திரி ஆலை உள்ளிட்ட பிற தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 4-ம் தேதி வரை தொடர் விடுமுறை என்பதால் மாணவ, மாணவிகள் சிரமத்திலிருந்து தப்பினர்.

மழை நீரே குடிநீராக..

குமரி மாவட்டத்தில் கடந்த 2004-ம் ஆண்டு சுனாமியால் நிகழ்ந்த பேரழிவுக்கு பிறகு, தற்போது ‘ஒக்கி’ புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. 700-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். புயல் பாதிப்பிலிருந்து 3 நாட்களாகியும் மீளமுடியாமல் குமரி மாவட்ட மக்கள் தவிக்கின்றனர்.

மின் விநியோகம் தடைபட்டுள்ளதால் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல், மழைநீரை பாத்திரங்களில் சேமித்து வைத்து குடிக்கவும், உணவு சமைக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். நேற்று மதியம் மழையின் தீவிரம் சற்று குறைந்திருந்ததால் மீட்புப் பணியில் அரசுத்துறைகள், தன்னார்வலர்கள் இறங்கினர். வெளியூர்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x