Published : 09 Oct 2023 07:56 PM
Last Updated : 09 Oct 2023 07:56 PM

மதுரையில் ‘ரோடு ரோலர்’கள் பற்றாக்குறையால் ஜல்லிகளுடன் சாலைகள் - மக்கள் அவதி

படங்கள்: நா.தங்கரத்தினம்

மதுரை: ‘ரோடு ரோலர்’ பற்றாக்குறையாலும், அதற்கு டீசல் போடுவதற்கு தயங்குவதாலும் மதுரை மாநகராட்சி குடியிருப்பு பகுதிகளில் புதிய சாலைகள் அமைப்பதில் தோய்வு ஏற்பட்டுள்ளது. பாதாள சாக்கடை, பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் முடிந்த வார்டுகளில் ஜல்லிகள் நிரப்பி 1 மாதம் முதல் 3 மாதம் ஆனநிலையிலும் புதிய சாலை அமைக்கப்படாததால் ஜல்லி நிரப்பி சாலைகளில் செல்லும் பொதுமக்கள் கால்களை பதம்பார்ப்பதோடு வாகனங்களுடைய டயர்கள் பஞ்சராகி பொருளாதார இழப்பும், உடல் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுகின்றன.

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தில் புதிய குடிநீர் விநியோக குழாய்கள், வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி நடக்கிறது. புறநகர் 28 வார்டுகளில் பாதாள சாக்கடைப்பணிகள் நடக்கிறது. இந்த இரு பணிகளும் முடிந்த வார்டுகளில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இப்பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவு ஈடுபடுத்தப்பட்டநிலையில் அவர்களுக்கும், அவர்களை மேற்பார்வை செய்யும் மாநகராட்சி பணியாளர்கள், ஒப்பந்த நிறுவன ஊழியர்களுக்கும் இடையே மொழி பிரச்சினை ஏற்படுகின்றன.

அதனால், பாதாளசாக்கடைப்பணிகளில் பல்வேறு குறைபாடுகளும், குளறுபடிகள் ஏற்பட்டு, அதன்பிறகு மீண்டும் மீண்டும் சாலைகள் சாலைகளை தோண்டி இப்பணிகள் நடக்கின்றன. சாலைகளை தோண்டும்போது, எந்த இடத்தில் பழைய குடிநீர் குழாய்கள், பாதாள சாக்கடை குழாய்கள் செல்கிற என்பது தெரியாமலே ஒப்பந்த ஊழியர்கள் சாலையை தோண்டுவதால் அடிக்கடி குடிநீர் குழாயும், பாதாளசாகடை குழாய்களும் உடைந்து குடிநீரில் கழிவுநீர் கலக்கிறது. அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள் கிடைக்காததால், கிடைக்கிற தொழிலாளர்களை கொண்டு ஒப்பந்த நிறுவனங்கள், இந்த பிரமாண்ட திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் குடிநீர் திட்டம், பாதாளசாக்கடை திட்டப்பணிகள் முடிந்த சாலைகளில் புதிய சாலை அமைக்கும் பணிகள் நடக்கிறது. இப்பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு போதிய தொழிலாளர்களும், வாகனங்களும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஜல்லிகளை நிரப்பி, மேடு பள்ளங்களை சரி செய்து புதிய சாலைகள் போடுவதற்கு ‘ரோடு ரோலர்’கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ‘ரோடு ரோலர்’ ஒரு சிலவையே இருப்பதால் இந்த ரோலர்கள் மட்டுமே அனைத்து வார்டுகளுக்கு கொண்டு சென்று வருகின்றன. மேலும், ரோடு ரோலர்களுக்கு டீசல் போட வேண்டும் என்பதற்காகவும் அவற்றை பயன்படுத்தாமலும் உள்ளனர்.

அதனால், சாலைகள் அமுங்கி மேடு, பள்ளங்களாக உருவாகியிருப்பதை உடனடியாக ஒப்பந்த நிறுவனங்களால் சரி செய்ய முடியவில்லை. பொதுமக்கள் வாகனங்கள் சென்று அதன் மூலம் சாலைகளில் போட்ட ஜல்லிகள் அமுக்கிய பிறகே ஒப்பந்ததாரர்கள் புதிய சாலைகளை போடுகின்றனர். இந்த ஒப்பந்த நிறுவனத்தினர் அரசியல் செல்வாக்குடன் இப்பணிகளை டெண்டர் எடுத்து இருப்பதால் அவர்களை மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து கண்டிக்கவும் முடியவில்லை. அதனால், மற்றொரு புறம் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு, மூன்று நாளைக்கு ஒரு முறை ஒரே ஒரு முறை ‘ரோடுரோலர்’ எடுத்து வந்து, அதையும் பெயரளவுக்கே நிரப்பப்பிய ஜல்லிகளை அமுக்கிவிட்டு செல்கின்றனர். அப்படியிருந்தும் ஜல்லிகள் அமுங்காமல் கற்கள் கூர்முனையுடன் மேலே நிற்பதால் இந்த சாலைகளில் செருப்புகளை அணிந்து நடந்து சென்றாலும் கால்களை ஜல்லிகள் பதம் பார்க்கின்றன. ஜல்லிகளில் நடந்து செல்லும் பெண்கள், முதியவர்களுக்கு கால்வலி ஏற்படுகிறது.

கார்கள், இரு சக்கர வாகனங்களில் செல்வோரின் டயர்களை பதம்பார்த்து அடிக்கடி பஞ்சராகிவிடுகிறது. பல வார்டுகளில் புதிய சாலை போடுவதற்காக ஜல்லிகள் நிரப்பி ஒரு மாதம் முதல் 3 மாதம் ஆனநிலையில் தற்போது வரை புதிய சாலைகள் போடவில்லை. அதனால், மக்களுக்கு பொருளாதார இழப்புகளும், உடல் ஆரோக்கிய குறைபாடுகளும் ஏற்படுகின்றன.

இதுகுறித்து ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்திடம் கேட்டால், “புதிய சாலைகள் போடுவது எளிதில்ல, பல ப்ராசஸ் உள்ளன. அதன் அடிப்படையிலே போட வேண்டிய இருப்பதால் தாமதம் ஏற்படுகிறது” என்று சமாளிக்கிறார்கள். மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், பதில் சொல்ல முடியாமல் விக்கி நிற்கிறார்கள். மக்கள், ஜல்லிகள் நிரப்பி சாலைகளில் செல்ல முடியாமல் அன்றாடமும் பாடாதபாடு படுகிறார்கள்.

மாநகராட்சியில் பொதுவாக வடக்கு, கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில்தான் இதுபோல் நீண்ட நாட்கள் ஜல்லிகள் நிரப்பி சாலைகள் போடப்படாமல் உள்ளது. மாநகராட்சி மேயர், ஆணையாளர், புதிய சாலைகளை போடுவதற்கு ஒப்பந்தம்விடப்பட்ட சாலைகளை பட்டிலிட்டு அதன் விவரங்களை நேரில் ஆய்வு மக்கள் படும் துயரங்களை போக்கி புதிய சாலைகளை போடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதுகுறித்து மேயர் இந்திராணியிடம் கேட்டபோது, ‘‘ஜல்லிகள் நிரப்பி 20 நாளில் போட ஆரம்பிக்கலாம். அதுபோன்ற ஜல்லிகள் நிரப்பி போடப்படாத சாலைகளை பட்டியல் எடுத்து உடனடியாக போடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x