Published : 09 Oct 2023 06:30 PM
Last Updated : 09 Oct 2023 06:30 PM
சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் அக்டோபர் 11 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சட்டன்ற அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்துக்குப் பிறகு, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமைச் செயலகத்தில், திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று காவிரி தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாளை (அக்.10), 2023-24 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவதாம் நடைபெறும்.
நாளை மறுநாள் அக்.11ம் தேதியன்று, நிதி அமைச்சர் இந்த துணை மானியக் கோரிக்கைக்கு பதில் அளிப்பார். அன்று சட்டமன்றத்தில், ஏதேனும் மசாதோக்கள் கொண்டு வந்தால், அவை விவாதிக்கப்பட்டு, அன்றைய தினமே நிறைவேற்றப்படும். ஒட்டுமொத்தமாக அக்.9, 10 மற்றும் அக்.11 ஆகிய மூன்று நாட்கள் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும்" என்று அவர் கூறினார்.
முன்னதாக, சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (அக்.9) தொடங்கியது. அவை மரபுப்படி, காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வினாக்கள் விடைகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். 2023-24 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
பின்னர், "தமிழக விவசாயத்துக்கு அடித்தளமாக விளங்கும், காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி" தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்து, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT