Published : 09 Oct 2023 06:22 PM
Last Updated : 09 Oct 2023 06:22 PM
சென்னை: தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது முதல்வர் ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.
சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (அக்.9) தொடங்கியது. அவை மரபுப்படி, காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வினாக்கள் விடைகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். 2023-24 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
பின்னர், "தமிழக விவசாயத்துக்கு அடித்தளமாக விளங்கும், காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி" தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தீர்மானத்தை நிறைவேற்றித் தருமாறு உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.
தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காவிரி விவகாரத்தில் அதிமுக சார்பில் மேற்கொள்ளப்பட்ட சட்டப் போராட்டங்களை பட்டியிலிட்டார். பின்னர், "காவிரி நீர் சம்பந்தமாக, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, கர்நாடக அரசு காவிரியில் தண்ணீரை திறக்க வேண்டும். அதை வலியுறுத்த வேண்டும் என தீர்மானத்தில் தெரிவிக்க வேண்டும்" என்றார்.
அப்போது குறுக்கிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "நான், என்னுடைய தீர்மானத்தைப் படிக்கிறபோது, தெளிவாக படித்திருக்கிறேன். உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை பேரவை ஒருமனதாக கேட்கிறது. தீர்மானத்தில் ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன்" என்றார்.
அப்போது குறுக்கிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்த அவை முன்னவர் துரைமுருகன், "உச்ச நீதிமன்றம் சென்று தண்ணீர் விடவில்லை என்று கூறினால், உடனே கர்நாடக அரசு என்ன சொல்வார்கள். இரு மாநில அரசுகளும் பேசித் தீர்த்துக் கொள்கிறோம் என்பார்கள். உடனே நீதிபதிகள் பேசித் தீர்த்துக்கொள்ள அனுமதித்து, வழக்கை ஒத்திவைத்துவிடுவர். எனவே, தற்கொலை செய்வதற்கு சமம் நீங்கள் பேசுவது. தமிழகத்தின் உரிமையை அடகுவைப்பதற்கு சமம்" என்றார்.
அதற்கு எடப்பாடி பழனிசாமி, "தற்கொலைக்கு சமம் என்ற வார்த்தை சரியானது இல்லை. அப்படிப்பட்ட கட்சியோடு ஏன் நீங்கள் கூட்டணி வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் 38 எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் உள்ளனர். ஏன் இந்த காவிரி பிரச்சினையை அவர்கள் எழுப்பவில்லை" என்றார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "காவிரி பிரச்சினை குறித்து திமுக உறுப்பினர்கள் பேசவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். நான் பேசியதை நிரூபிக்கவா? இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லக் கூடாது. ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள். நாடாளுமன்றத்தில் பேசவில்லை என்று சட்டமன்றத்தில் இப்படி பேசுவதுதான் மரபா?" என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி, "பேசினால் மட்டும் போதுமா? 38 பேரும் சேர்ந்து அவையை ஒத்திவைத்திருக்கலாம் அல்லவா? அப்படி அழுத்தம் கொடுத்ததால்தான் காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, காலதாமதம் செய்ததால், மத்திய அரசு மீது நாங்கள் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோம். துணிச்சலோடு தொடர்ந்தோம். அந்த துணிச்சல், உங்களிடத்தில் காணவில்லையே? பார்க்க முடியவில்லையே?" என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்,"துணிச்சலைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்ன துணிச்சல் என்பது எங்களுக்குத் தெரியும். அதை இங்கு சொல்லி, அவை மரபை மீற வேண்டிய அவசியம் இல்லை. நிச்சயமாக, உறுதியாக பலமுறை காவிரி பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியிருக்கிறோம். பலமுறை அவையே நடக்கமுடியாத அளவுக்கு செய்திருக்கிறோம்.
ஏதோ சட்டமன்றத்தில், நாங்கள் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற காரணத்தால், அமைதியாக அமர்ந்துள்ளோம் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசிவிடலாம் என்று கருதுகிறாரா எதிர்க்கட்சித் தலைவர்?" என்றார். இப்படியாக காவிரி விவகாரம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானத்தின் போது திமுக அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT