Published : 09 Oct 2023 05:41 PM
Last Updated : 09 Oct 2023 05:41 PM
மதுரை: தமிழகம் முழுவதும் தொடக்க கூட்டுறவு வங்கிகளை நஷ்டப்படுத்தும் திட்டத்தை அமல்படுத்துவதை தமிழக அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது. இதில் 6 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை நஷ்டப்படுத்தும் பல்நோக்கு சேவை மைய திட்டத்தில் தேவையற்ற வேளாண் உபகரணங்கள், டிராக்டர், லாரி, பிக்கப் வேன், நெல்-கரும்பு அறுவடை இயந்திரம் போன்ற வாகனங்களை வாங்க கட்டாயப்படுத்தி அமல்படுத்துவதை கைவிடவேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் அருகில் இன்று நடைபெற்றது.
இதற்கு, அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் காமராஜ்பாண்டியன் தலைமை வகித்தார். செய்தி தொடர்பு செயலாளர் ஆசிரியத்தேவன் முன்னிலை வகித்தார். இதில் மதுரை மாவட்டச் செயலாளர்கள் கணேசன் (மதுரை), அருணகிரி (தேனி), ரவிச்சந்திரன் (திண்டுக்கல்), யோகசரவணன் (சிவகங்கை), பாலசுப்பிரமணியன் (புதுக்கோட்டை), கிருஷ்ணன் (ராமநாதபுரம்) ஆகியோர் பேசினர். இதில், ஓய்வுபெற்றோர் சங்க மாவட்ட நிர்வாகிகள் திருச்சிற்றம்பலம் (மதுரை), பிரிட்டோ (சிவகங்கை), முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), நெடுமாறன் (புதுக்கோட்டை), சுப்பையா (திண்டுக்கல்), முருகன் (தேனி) உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் மதுரை மாவட்டப் பொருளாளர் பாரூக் அலி நன்றி கூறினார். இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 700 கூட்டுறவு கடன் சங்கம், நகர கூட்டுறவு கடன் சங்கப் பணியாளர்கள், 1000 ரேஷன்கடை விற்பனையாளர்கள், ஓய்வுபெற்ற பணியாளர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் ற்கும் கலந்து கொண்டனர். தமிழக அரசு கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அக்.12-ல் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT