Published : 09 Oct 2023 05:00 PM
Last Updated : 09 Oct 2023 05:00 PM
சென்னை: "கருத்து குருடர்களாக இருப்பவர் பலர், இந்து சமய அறநிலையத் துறை தமிழகத்தில் ஆக்கிரமித்துள்ளதாக முழு விவரம் தெரியாமல் பேசி வருகின்றனர். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, 5,381.65 கோடி ரூபாய் அளவுக்கு திருக்கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன" என்று இந்து சமய அறநிலையைத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளாார்.
சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (அக்.9) தொடங்கியது. அவை மரபுப்படி, காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வினாக்கள் விடைகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். 2023-24 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
பின்னர், "தமிழக விவசாயத்துக்கு அடித்தளமாக விளங்கும், காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி" தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இத்தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக வினாக்கள் விடை நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், ”“பண்ருட்டியில் 45 ஆண்டு காலத்துக்கு மேலாக சுமார் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில் நிலத்தை தனிநபர் ஒருவர் குத்தகை என்கிற பெயரில் ஆக்கிரமித்து அனுபவித்து வைத்திருந்தார். பல ஆண்டுகள் பல முயற்சிகளை நான் மேற்கொண்ட போதும் அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தது. நான் இந்த அவையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, தமிழக முதல்வர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வந்தவுடன், அந்த இடம் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தாலும் தமிழக முதல்வர் சட்டத்தின் ஆட்சி துணை கொண்டு அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திருக்கோயிலுக்கு சொந்தமாக்கப்படும் என அமைச்சர் கடந்த கூட்டத் தொடரில் அறிவித்தார்.
தற்போது 100 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த சொத்தின் ஒரு பகுதியை மீட்டெடுத்த தமிழக தமிழக முதல்வருக்கும், அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டு, பேருந்து நிலையம் அருகில் இருந்த மொத்தம் 6½ ஏக்கர் காலியிடத்தில் இரண்டரை ஏக்கர் மீட்கப்பட்டிருக்கிறது. மீதம் இருக்கின்ற 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தையும் மீட்பதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, "இந்த ஆட்சியைப் பொறுத்தளவில், கருத்து குருடர்களாக இருப்பவர் பலர் இந்து சமய அறநிலையத் துறை தமிகத்திலே ஆக்கிரமித்துள்ளதாக முழு விவரம் தெரியாமல் கூறிக் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில், தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பிறகு, 5,381.65 கோடி ரூபாய் அளவுக்கு திருக்கோயில் சொத்துகளை குறிப்பாக, திருக்கோயில்கள் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்ற ஒரு பகுதியை சார்ந்த 9 நபர்களிடமிருந்து மட்டும் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு இந்த ஆட்சியில் சொத்துக்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, உறுப்பினர் வேல்முருகன் கடந்த ஆண்டு வைத்த கோரிக்கை நிறைவேற்றி இருக்கின்றோம். இப்போது வைத்திருக்கின்ற கோரிக்கையை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றுவதற்கு தமிழக முதல்வரின் உதவியோடு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT