Published : 09 Oct 2023 03:50 PM
Last Updated : 09 Oct 2023 03:50 PM
சென்னை: காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு தமிழக விவசாய விவசாய சங்கங்கள் டெல்டா மாவட்டங்களில் பந்த் போராட்டம் அறிவித்துளளதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், ''காவிரியில் உடனடியாகத் தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் அக்டோபர் 11 அன்று முழு கடை அடைப்புப் போராட்டத்தை நடத்துவது என்று விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இந்தப் போராட்டத்திற்கும் அன்றைய தினம் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பாக நடத்தப்படும் மறியல் போராட்டத்துக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.
குறுவைப் பயிரைப் பாதுகாக்கவும், சம்பா சாகுபடியை உடனடியாகத் துவக்கவும் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்குக் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும். இது தொடர்பாக ஒன்றிய பாஜக அரசின் நீர்வளத்துறை அமைச்சரைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரடியாக சந்தித்து வலியுறுத்திய பிறகும் உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமின்றி, கர்நாடகாவில் இருக்கும் பாஜக தலைவர்கள் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விடக் கூடாது என்று வெளிப்படையாகப் பேசி அச்சுறுத்தி வருகின்றனர். அவர்களின் தூண்டுதலின் காரணமாக கர்நாடகாவில் இருக்கும் இனவாத அமைப்புகளும் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இதனால், முதலில் தண்ணீர் திறந்துவிடுவதாகச் சொன்ன கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு இப்போது பின்வாங்கிவிட்டது. இப்படி தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக செயல்படும் பாஜகவையும், ஒன்றிய பாஜக அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். கர்நாடக அரசு கூட்டாட்சித் தத்துவத்தை மதித்து உடனடியாகத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை உடனடியாகத் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் இந்த 'பந்த்' போராட்டம் வெற்றிபெற அம்மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்'' என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT