Published : 09 Oct 2023 01:40 PM
Last Updated : 09 Oct 2023 01:40 PM
சென்னை: "தமிழக விவசாயத்துக்கு அடித்தளமாக விளங்கும், காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி" தமிழக சட்டப்பேரவையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (அக்.9) தொடங்கியது. அவை மரபுப்படி, காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வினாக்கள் விடைகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். 2023-24 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
பின்னர், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசியதாவது: "தமிழகத்தின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய, காவிரி நதிநீர் உரிமையைக் காக்கும் கடமையை நோக்கிய நமது சிந்தனையை, எண்ணத்தை இன்னும் சொன்னால் கட்டளையை இடக்கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இது அமைந்திருக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், காவிரி நதி நீர் உரிமையைக் காப்பதில், திமுக என்றும் எப்போதும் எந்த சூழலிலும் உறுதியாக இருக்கும் என்ற உறுதிமொழியை இந்த மாமன்றத்துக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்த அரசு பொறுப்பேற்றப் பிறகு, காவிரி டெல்டா உழவர்களுக்காக மேட்டூர் அணையானது சீராக திறந்துவிடப்பட்டு வருகிறது. 2021ம் ஆண்டு மேட்டூர் அணை திறப்பதற்கான குறிப்பிட்ட ஜுன் 12ம் நாளன்று திறக்கப்பட்டது. 2022ம் ஆண்டு முன்கூட்டியே மே மாதம் 24ம் நாளன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டது. காவிரி டெல்டா பகுதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாய்க்கால்கள் திட்டமிடப்பட்டு முறையாக தூர்வாரப்பட்டதால், காவிரி நீர் கடைமடை வரை சென்று பயிர்கள் செழித்தன.
இதன் பயனாக 2021-22ம் ஆண்டில், 46.2 லட்சம் டன் அளவிலும், 2022-23ம் ஆண்டில், 45.9 லட்சம் டன் அளவிலும், காவிரிப் பாசனப் பகுதியில் நெல் உற்பத்தி செய்யப்பட்டு மிகப்பெரிய சாதனையைப் படைத்தோம். உற்பத்தியும் பெருகியது. உற்பத்திப் பரப்பும் விரிவடைந்தது. இந்த சாதனையானது இந்த ஆண்டு தொடர்ந்தது. இந்த ஆண்டில் ஜுன் 1, 2023 நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்த 69.7 டிஎம்சி நீர் அளவையும், தென்மேற்கு பருவமழை முன்னறிவிப்பையும் கருத்தில்கொண்டு, 12.06.2023 அன்று மேட்டூர் அணையை குறுவை பாசனத்துக்காகத் திறந்துவைத்தோம்.
மேட்டூர் அணையின் நீர் இருப்பு 50 டிஎம்சிக்கும் மேலாக இருக்கும்போது உழவர்கள் பருவத்தே பயிர் செய்ய ஏதுவாக மேட்டூர் அணை ஜுன் 12ம் நாள் திறப்பது வழக்கமாக உள்ளது. அதனை முறைப்படி திறந்துவைத்தோம். திறந்துவிடப்பட்ட நீர் கடைமடைப் பகுதிவரை சென்றடைந்தது. நமது வேளாண் பெருமக்களும், கடந்தாண்டுகளைப் போலவே குறுவைப் பயிரை சிறப்பாக பயிரிடுவதற்கான அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டார்கள். இத்தகைய நிலையில், செயற்கையான ஒரு நெருக்கடியை கர்நாடக மாநில அரசு உருவாக்கி வருகிறது.
கர்நாடக மாநில அரசு நமக்கு வழங்கவேண்டிய, உரிய தண்ணீரை இந்த மாதத்தில் திறந்துவிடவில்லை. இதுதொடர்பாக எடுத்த முயற்சிகளை, விரிவாக சொல்ல வேண்டியதை நான் எனது கடமையாக கருதுகிறேன். கடந்த ஜுன் மாதத்தில், பிலுகுண்டுலுவில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய 9.19 டிஎம்சிக்குப் பதிலாக 2.28 டிஎம்சி மட்டுமே வரப்பெற்றோம். இதனைத்தொடர்ந்து 3.7.2023 அன்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை நேரில் சந்தித்தார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மாதவாரியாக ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் வழங்கவேண்டிய நீரினை உடனடியாக வழங்கிட கர்நாடகாவுக்கு உத்தரவிடமாறு வலியுறுத்தினார். மீண்டும் 5ம் தேதியும் மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால், 2023-24 பாசன ஆண்டானது, ஒரு பற்றாக்குறை ஆண்டு என ஒரு காரணத்தைக்கூறி, இதன்பிறகும் கர்நாடகா நமக்கு அளிக்கவேண்டிய நீரினை அளிக்கவில்லை.
இதனால், குறுவைப் பயிர் பாதிக்கப்படும் என்ற சூழ்நிலையில், 19.07.2023 அன்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாதவாரியாக தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய நீரை அளிக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட காவிரி மேலாண்மை வாரியத்துக்கு அறிவுறுத்துமாறு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் வலியுறுத்தினார். இதனைத்தொடர்ந்து ஜுலை 20ம் தேதியன்று, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் மீண்டும் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை நேரில் சந்தித்து இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வலியுறுத்தினார்.
இதன்பின்னரும், கர்நாடக மாநில அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை. ஜுலை 27ம் தேதியன்று கர்நாடகவின் 4 அணைகளின் மொத்த கொள்ளளவு 30 ஆண்டு சராசரியில் 84 விழுக்காடாகவும், அந்த அணைகளின் நீர்வரத்து 30 ஆண்டு சராசரியில் 51 விழுக்காடாக இருந்தபோதிலும், பிலிகுண்டுலுவில் 13 விழுக்காடு மட்டுமே நீர் வரப்பெற்றது. இதைச் சுட்டிக்காட்டி தமிழகத்துக்கு உடனடியாக நீர் வழங்குமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கோரப்பட்டது.
தமிழக அரசு மேற்கொண்ட இந்த தொடர் முயற்சிகளை அடுத்து, ஜுலை 25 அன்று கபினி அணையிலிருந்து விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடி நீரினை அடுத்த 6 நாட்களுக்கு திறந்துவிடுமாறு கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டது. ஜுலை 31ம் தேதியன்று நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 83வது கூட்டத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, கர்நாடக அரசு அளிக்க வேண்டிய நீரை வழங்க உத்தரவிடுமாறு கோரியது. இருப்பினும், ஆகஸ்ட் 1 முதல் பிலிகுண்டுலுவில் அடுத்த 7 நாட்களுக்கு விநாடிக்கு 10000 கனஅடி நீரினை மட்டுமே திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவை அளித்தது.
கர்நாடக அரசு நமக்கு வழங்கவேண்டிய நீரின் பற்றாக்குறையை சரிசெய்யுமாறு மத்திய ஜல் சக்தி அமைச்சகத்துக்கு அறிவுறுத்திட, ஆகஸ்ட் 4ம் தேதி பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன். இதனையடுத்து ஆகஸ்ட் 10ம் தேதியன்று நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டத்தில், பிலிகுண்டுலுவில் விநாடிக்கு 15,000 கனஅடி என்ற அளவில், ஆகஸ்ட் 11 முதல் அடுத்த 15 நாட்களுக்கு வழங்குமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது. ஆகஸ்ட் 11ம் தேதியன்று நடந்தக் கூட்டத்தில், 15,000 கனஅடி என்பதை, 10,000 கனஅடியாக ஆணையமே குறைத்துக் கொண்டது. இதனை ஏற்காமல், தமிழக அரசு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள்.
இதுதொடர்பாக உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்து, கர்நாடகா உடனடியாக 24,000 கனஅடி நீரை வழங்கவும், பற்றாக்குறையான 28.849 டிஎன்சி நீரை வழங்கவும் உத்தரவிடுமாறு கோரி ஆகஸ்ட் 14ம் தேதி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து ஆகஸ்ட் 15ம் தேதியன்று நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், விநாடிக்கு 5000 கனஅடி நீரை 15 நாட்களுக்கு வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்தக் கூட்டங்களில், ஏற்கெனவே நிலுவையில் உள்ள பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கர்நாடகாவுக்கு உத்தரவிடுமாறு நாம் வலியுறுத்திய போதிலும் எந்தவித உத்தரவையும் ஆணையம் வழங்கவில்லை. எனவே செப்டம்பர் 19 அன்று, தமிழக நீர்வளத்துறை அமைச்சர், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களுடன், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர். உடனடியாக 12,500 கனஅடி நீரை அடுத்த 15 நாட்களுக்கு வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிடுமாறு, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அறிவுறுத்துமாறு கோரிக்கைவிடுத்தனர். ஆனால், இந்த மனு மீது மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனிடையே, செப்டம்பர் 19 அன்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் தனது 22,23 மற்றும் 24வது கூட்டங்களில் எடுத்த முடிவினை மீண்டும் மறுபரிசீலனை செய்ய உத்தரவிடக்கோரி ஒரு மனுதாக்கல் செய்தது. இம்மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம் வழங்கிய உத்தரவுகளை பின்பற்றவும், இவ்வழக்குடன் தொடர்புடைய அனைத்து மனுக்களையும் முடித்துவைப்பதாகவும் ஆணையிட்டது.
காவிரி மேலாண்மை ஆணையம் செப்டம்பர் 29 அன்று, நடைபெற்ற தனது 25வது கூட்டத்தில், பிலிகுண்டுலுவில் இருந்து விநாடிக்கு 3000 கனஅடி நீரை வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த அளவையும்விட குறைவாகவே கர்நாடகா, தற்போது பிலிகுண்டுலுவில் தண்ணீர் அளித்துவருவதால், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர், காவிரி மேலாண்மை ஆணையத்தின் நீர்வளத்துறை தலைவருக்கு கடந்த 6.10.2023 அன்று எழுதிய கடிதத்தில், கர்நாடகா ஆணையத்தின் உத்தரவை பின்பற்றாததைச் சுட்டிக்காட்டி, ஆணையம் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு 11.10.2023 அன்று அடுத்தக் கூட்டத்தை நடத்த உள்ளது. இக்கூட்டத்தில், பற்றாக்குறை ஆண்டாகிய 2023-24ல், ஏற்கெனவே காவிரி ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்துள்ள அளவில் கர்நாடகா அளிக்க வேண்டிய நீர் அளவில் உள்ள குறைபாட்டை ஈடுசெய்ய அடுத்த 10,15 நாட்களுக்கு அளிக்க வேண்டிய நீரையும் சேர்த்து வழங்க வலியுறுத்த உள்ளோம். மேலும், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து தேவைப்படின், தக்க சட்ட நடவடிக்கையும் எடுக்கபப்டும்.
தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களிலும், காவிரி ஒழுங்காற்றுக்குழுக் கூட்டங்களிலும், தொடர்ந்து வலுவாக வாதிட்டு வந்துள்ளதால், 2023-24 பற்றாக்குறை ஆண்டாக இருக்கும்போதிலும், 1.06.2023 முதல் 3.10.2023 வரை பிலிகுண்டுலுவில் 46.1 டிஎம்சி நீர் பெறப்பட்டுள்ளது. இந்த பாசன ஆண்டு பற்றாக்குறை ஆண்டாக இருந்துவரும் நிலையில், 5.10.2023 வரை, 90.25 டிஎம்சி நீர் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. இதன்மூலம், காவிரி டெல்டாவில் 6 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்காக, முறைப் பாசனத்தின்படி, நீர் பங்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், எஞ்சி உள்ள நாட்களுக்கு நாம் நமக்கு உரிய நீரைப் பெற்று குறுவைப் பயிரையும் அடுத்து நடவு செய்யப்படவுள்ள சம்பா பயிரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, நமது வேளாண் மற்றும் பொதுமக்களின் நலன்காக்க, மத்திய அரசை வலியுறுத்தி, இந்த தீர்மானத்தை இப்பேரவை நிறைவேற்ற வேண்டும் என கோருகிறேன்.
தமிழக மக்களின் உணவுத் தேவைக்காக மட்டுமல்ல, மனித உயிர்களின் உயிர் தேவைக்கு அவசியமானது காவிரி நீர். அதை தமிழக மக்களுக்குப் பெற்றுத்தருவதில், எந்த சூழலிலும் விட்டுக்கொடுக்காமல், வாதிட்டுப் பெற்றுத்தருவோம். மத்திய அரசு இதில் முறையாக செயல்பட்டு தமிழக மக்களுக்கு காவிரி நீரை பெற்றுத்தர வேண்டும். இதற்கான அனைத்துவிதமான முயற்சிகளையும் திமுக அரசு செய்யும் என்று மாமன்ற உறுப்பினர்களுக்கு உறுதியளிக்கிறேன். அதே உணர்வுடன், இந்த தீர்மானத்தை இப்பேரவையின் சார்பில், நிறைவேற்றித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தீர்மானம்: தமிழக விவசாயத்துக்கு அடித்தளமாக விளங்கும், காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. முதல்வரின் தனித்தீர்மானத்தை ஆதரித்து உறுப்பினர்கள் பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT