Published : 19 Dec 2017 11:57 AM
Last Updated : 19 Dec 2017 11:57 AM
‘‘கூடுதல் விலைக்கு உரம் விற் றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து உரக்கடைகள், கூட்டுறவுச் சங்கங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி விலைப் பட்டியலையும் வேளாண்மைத் துறை வெளியிட்டுள்ளது.
தற்போது மதுரை மாவட்டத்தில் நடவு செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு தேவையான ரசாயன உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
வேளாண்மைத் துறை தற்போது உரங்களுடைய விலைப் பட்டியலை வெளியிட்டு, விவசாயிகள் கூடுதல் விலைக்கு உரங்களை வாங்கி ஏமாற வேண்டாம் என்றும், கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இந்த சுற்றறிக்கை அனைத்து உதவி வட்டார உதவி இயக்குநர்களுக்கும் மாவட்ட வேளாண்மைத்துறை அனுப்பிவைத்து உரம் விற்பனையைக் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வாடிப்பட்டி வேளாண்மை உதவி இயக்குநர் பெ. ராமசாமி கூறியதாவது:
தனியார் சில்லறை விற்பனையாளர்களும், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கும் உரங்களை விற்பனை செய்ய விற்பனை முனை இயந்திரம் வழங்கப்பட்டது. விற்பனை முனை இயந்திரம் மூலமே உரம் விற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உரம் பெற்றதும் விற்பனையாளரிடம் விவசாயிகள் ரசீது பெற வேண்டும். உரம் சரியான விலைக்கு விற்கப்படுகிறதா என கண்காணிக்கப்படுகிறது. கூடுதல் விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும். சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்குப்பின் 15.12.2017 அன்றைய நிலையில் உரங்கள் விலை விற்கப்பட வேண்டும்.
யூரியா அனைத்து நிறுவனங்களின் ஒரு மூடை விலை ரூ.295-க்கு விற்கிறது.
ஒரு மூடை டிஏபி(ஸ்பீக்) ரூ.1165-க்கும், ஒரு மூடை டிஏபி(மங்களா) ரூ.1105-க்கும், ஒரு மூடை டிஏபி(இப்கோ) ரூ.1076-க்கும். இண்டியன் பொட்டாஷ் டிஏபி; ரூ.1080-க்கும், இண்டியன் பொட்டாஷ் கம்பெனியில் பொட்டாஷ் ரூ.626-க்கும், காம்பளக்ஸ் உரம்(ஸ்பீக்) ரூ.897.5-க்கும், காம்பளக்ஸ் உரம்(மங்களா) ரூ.872-க்கும் விற்கிறது. அதுபோல காம்பளக்ஸ் உரம்(பேக்ட்) ரூ.982-க்கும், காம்பளக்ஸ் உரம் (இப்கோ) ரூ.850-க்கும், காம்பளக்ஸ் உரம்(கோரமண்டல்) ரூ.873-க்கும் விற்கிறது. இண்டியன் பொட்டாஷ் கம்பெனியில் காம்பளக்ஸ் உரம் ரூ.870-க்கும் விற்கிறது. யூரியா தவிர பிற உரங்களின் விலை மாறுதலுக்குட்பட்டது.
இந்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு வாடிப்பட்டி வட்டார விவசாயிகள் வாடிப்பட்டி வட்டார வேளாண்மை அலுவலர் ரா.பாண்டியை 9486161498 என்ற எண்ணிலும், வாடிப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பெ.இராமசாமி 97516777767 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மற்ற வட்டார விவசாயிகள், அந்தந்த பகுதி வேளாண்மை வட்டார உதவி இயக்குநர், வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என்றார்.
வேளாண் துறை எச்சரிக்கை
விவசாயிகள் உரம் வாங்க செல்லும் போது ஆதார் அட்டை எடுத்துச்செல்ல வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டுள்ளதால், கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் உரங்களின் விலையும் சற்று உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இருப்பில் உள்ள உர மூட்டைகளின் மீது, பழைய விலையை மறைக்காமல் புதிய விலை விவரம் எழுதப்பட வேண்டும்.
கடையில் விலைப்பட்டியல் பலகையில் ஜி.எஸ்.டிக்கு முன்பு ஜி.எஸ்.டிக்கு பின்பு என இரண்டு விலை விவரங்களையும் எழுத வேண்டும் உரத் தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து புதிதாக அனுப்பப்படும் உர மூட்டைகளில் புதிய விலை குறிப்பிடப்படும். இதனை விட கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது என தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களை வேளாண்மை துறை எச்சரித்துள் ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT