Published : 09 Oct 2023 05:14 AM
Last Updated : 09 Oct 2023 05:14 AM
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதில், காவிரி தொடர்பான அரசினர் தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வருகிறார்.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. பின்னர், பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 20-ம் தேதி தொடங்கி ஏப்.21-ம் தேதி வரை நடைபெற்றது.
பேரவை விதிகளின்படி, ஒரு கூட்டம் முடிந்தால் அடுத்த 6 மாதங்களுக்குள் மீண்டும் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், அக்.20-ம் தேதிக்குள் கூட்டம் நடத்தப்பட வேண்டி இருந்தது. கடந்தசெப்.20-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அக்.9-ம் தேதி பேரவைகூடும் என்று அறிவித்தார்.
அதன்படி, சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்றுதொடங்குகிறது. அவை மரபுப்படி, காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, சமீபத்தில் காலமான பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், தமிழக முன்னாள் தலைமைச் செயலர் ப.சபாநாயகம், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி,வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
தொடர்ந்து, கேள்வி நேரம் இடம்பெறும். பிறகு, 2023-24-ம் ஆண்டின் கூடுதல் செலவினங்களுக்கான துணை மானியக் கோரிக்கைகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
இதையடுத்து, காவிரி தொடர்பான அரசினர் தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிகிறார். காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்தி இத்தீர்மானத்தை முதல்வர் கொண்டு வருகிறார்.
பின்னர், பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூடி, கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவெடுக்கப்படும். அனேகமாக 3-4 நாட்கள் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை குறித்து பேரவைத் தலைவரிடம் அதிமுக ஏற்கெனவே மனு அளித்துள்ளது. இதுபற்றி பேரவையில் அதிமுக மீண்டும் கேள்வி எழுப்பும் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...