Published : 09 Oct 2023 05:18 AM
Last Updated : 09 Oct 2023 05:18 AM
சென்னை: வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரியும், நிரந்தரப் பணியிடங்களில் அயல்பணி மூலம் ஆட்களை நியமிப்பதைக் கண்டித்தும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த வங்கி ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மக்களுக்கு பொதுச் சேவை வழங்குவதில் வங்கிகள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. நாட்டில் உள்ள வங்கிகள் அனைத்தும் கடந்த 1969-ம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டன. அதன் பிறகு, நாட்டின் அனைத்துப் பகுதிகள் மட்டுமின்றி குக்கிராமங்களிலும் வங்கிக் கிளைகள் திறக்கப்பட்டன.
அண்மைக்காலமாக வங்கி வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல், வங்கிப் பரிவர்த்தனைகளும் அதிகரித்துள்ளன. இதனால், வங்கி ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகரித்துள்ளது. அதே சமயம், வங்கிகளில் போதிய அளவுக்கு ஊழியர்கள் பணியமர்த்தப்படுவது இல்லை. ஊழியர்கள் ஓய்வு பெறுதல், பதவி உயர்வு மற்றும் ஊழியர்கள் இறத்தல் போன்ற சமயங்களில் காலியாகும் பணியிடங்கள் மீண்டும் நிரப்பப்படுவதில்லை. வங்கிகளில் வர்த்தகம் அதிகரிக்கும்போது கூடுதல் ஊழியர்களும் நியமிக்கப்படுவதில்லை.
அதிகளவு அரசு திட்டங்கள் வங்கிகள் மூலமாக செயல்படுத்தப்படுகின்றன. ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம், 50 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், வங்கிக் கிளைகளில் பணிச்சுமை அதிகரித்துள்ளது.
ஊழியர் பற்றாக்குறை காரணமாக வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்க முடிவதில்லை. இதனால், வாடிக்கையாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் அவ்வப்போது மோதல் ஏற்படுகிறது.
மேலும், எழுத்தர் (கிளார்க்) போன்ற நிரந்தர பணிகளுக்கு அதிகளவு ஊதியம் வழங்கும் என்பதற்காக, அதைத் தவிர்க்கும் வகையில் அப்பணிக்கு அயல்பணி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, வங்கிகளில் போதிய ஊழியர்களை நியமிக்கக் கோரியும் நிரந்தரப் பணியிடங்களில் அயல்பணி மூலம் ஆட்களை நியமிப்பதைக் கண்டித்தும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, வங்கிகள் தனித்தனியாக வரும் டிச.4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையிலும், மாநில அளவிலான வேலை நிறுத்தம் ஜன.2 முதல் 6-ம் தேதி வரையிலும், ஜன.19 மற்றும் 20-ம் தேதி அகில இந்திய அளவில் 2 நாட்களும் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு சி.எச். வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT