Published : 09 Oct 2023 05:21 AM
Last Updated : 09 Oct 2023 05:21 AM

ஓட்டுநர் நியமன டெண்டரை எதிர்த்து தமிழகம் முழுவதும் நாளை சிஐடியு ஆர்ப்பாட்டம்

சென்னை: ஒப்பந்த நிறுவனம் மூலம் ஓட்டுநர் நியமனத்துக்கான டெண்டரை எதிர்த்து மாநிலம் தழுவிய அளவில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சம்மேளன நிர்வாகிகள் கூறியதாவது: போக்குவரத்துக் கழகங்களைத் தனியார்மயமாக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக ஒப்பந்த நிறுவனம் மூலம் ஓட்டுநர்களை நியமிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கினோம்.

இதுதொடர்பான பேச்சுவார்த்தை நிலுவையில் இருக்கும்போதே, தொழிலாளர் துறை அறிவுறுத்தலை மீறி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அண்மையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் ஒப்பந்த நிறுவனம் மூலம் ஓட்டுநர்களை நியமிப்பதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஓட்டுநர் போன்ற நிரந்தரத் தன்மையுடைய பணிகளைக் கூட தனியாருக்கு தாரை வார்த்தால் பொதுத்துறை நிறுவனத்தின் செயல்பாடுகள் என்ன என்ற கேள்வி எழுகிறது.

படித்த இளைஞர்களுக்கு அரசுப் பணியே கிடைக்காத நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். இது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்பதற்கான தூண்டுகோலாகவே நாளைய தினம் தமிழகம் முழுவதும் மண்டல அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். சென்னையில் மாலை 4 மணியளவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சம்மேளன பொதுச்செயலாளர் ஆறுமுகநயினார் பங்கேற்கிறார்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x