Published : 09 Oct 2023 05:30 AM
Last Updated : 09 Oct 2023 05:30 AM
ஓசூர்: கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி பட்டாசுக் கடையில்ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்தது. உயிரிழந்தோருக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சக்கரபாணி அஞ்சலி செலுத்தினர். இந்த வழக்கில் கடை உரிமையாளர் மற்றும் அவரது மகனை போலீஸார் கைது செய்தனர்.
ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் ராமசாமி என்பவரது இரு பட்டாசுக் கடைகளை, அவரது மகன் நவீன்நடத்தி வந்தார். இங்கு தமிழகத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்தனர். தீபாவளி விற்பனைக்காக நேற்று முன்தினம் லாரியிலிருந்து பட்டாசுகளை இறக்கியபோது, திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில், கடையில் பணிபுரிந்ததொழிலாளர்கள் தருமபுரி மாவட்டம் அரூர் டி.அம்மாப்பேட்டையைச் சேர்ந்த வேடப்பன்(25), ஆதிகேசவன்(23), விஜயராகவன்(20), இளம்பரிதி(19), ஆகாஷ்(23), கிரி (22), சச்சின்(22) ஆகிய 7 பேர், திருவண்ணாமலை மாவட்டம் நீபந்துறையைச் சேர்ந்த பிரகாஷ்(20), கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர், வாணியம்பாடியைச் சேர்ந்த 2 பேர் என 13 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், பலத்த காயமடைந்த கடை உரிமையாளர் நவீன் உள்ளிட்ட 7 பேர் அத்திப்பள்ளியில் உள்ள ஆக்ஸ்போர்டு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். இதில், ஓசூரைச் சேர்ந்த அந்தோணி பால்ராஜ் (30) நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்தது. அவர்களில் பலர் பட்டதாரிகள். அவர்களது உடல்கள் பிரேதப்பரிசோதனைக்குப் பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதற்கிடையே, தமிழக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சக்கரபாணி, கிருஷ்ணகிரி ஆட்சியர் சரயு,ஓசூர் உதவி ஆட்சியர் சரண்யா, எம்எல்ஏ பிரகாஷ், ஓசூர் மேயர் சத்யா ஆகியோர் அத்திப்பள்ளி மருத்துவமனைக்குச் சென்று, உயிரிழந்தோர் உடல்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.3 லட்சம் நிவாரணத் தொகையை அமைச்சர்கள் வழங்கினர். உயிரிழந்தோரின் உடல்கள் தனித்தனியாக தமிழக அரசின்ஆம்புலன்ஸ் மூலம் பகல் 12 மணியளவில் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
விபத்து தொடர்பாக அத்திப்பள்ளி போலீஸார் வழக்கு பதிவு செய்து, கடை உரிமையாளர் ராமசாமி, அவரது மகன் நவீன் ஆகியோரைக் கைது செய்தனர்.
விபத்துக்கு காரணம் என்ன? கர்நாடக மாநில போலீஸார் கூறும்போது “விபத்துக்கு உள்ளான பட்டாசுக் கடையின் பின்பகுதியில் அனுமதியின்றி பட்டாசுக் கிடங்கு வைத்துள்ளனர். மேலும், ரூ.5 லட்சம் வரை பட்டாசுகளை இருப்புவைக்க அனுமதி பெற்ற நிலையில், ரூ.5 கோடி மதிப்பிலான பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அளவுக்கு அதிகமான பட்டாசுகளை குறுகிய இடத்தில் வைத்ததே, விபத்துக்கு முக்கியக் காரணம்" என்றனர்.
தலைவர்கள் இரங்கல்: அத்திப்பள்ளி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: அத்திப்பள்ளி பட்டாசுக் கடை விபத்தில் 14 பேர் உயிரிழந்த செய்தி மிகவும் வேதனையை அளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவோர், விரைவில் நலம்பெறதமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பாஜக தலைவர் அண்ணாமலை: தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. விபத்தில் காயமடைந்தோருக்கு உயர்தர சிகிச்சை கிடைப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: அண்மைக்காலங்களில் பட்டாசு விபத்துகள் அதிகரித்து வரும்நிலையில், அவற்றைத் தடுக்கும்வகையில் விதிகளைக் கடுமையாக்க வேண்டும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: இந்த விவகாரத்தில் முதல்வர் கவனம் செலுத்தி, பட்டாசு ஆலைகள், கடைகளில் பாதுகாப்புகளை தீவிரப்படுத்த வேண்டும்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: எளிதில் தீப்பிடிக்கிற ஆபத்தான பொருட்களைக் கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். இதுபோன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்க வேண்டும்.
இந்திய கம்யூ. மாநில செயலாளர் இரா.முத்தரசன்: எதிர்காலத்தில் விபத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தேவையான மாற்றங்களை செய்து, சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டும்.
இதேபோல, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், சமகதலைவர் ரா.சரத்குமார் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT